வருவாய் இழப்பில்லாததால் சாகுபடி அதிகரிப்பு | Kozhikondai flower cultivation | Salem| Attur
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே மல்லியக்கரை, அரசநத்தம், கந்தசாமிபுதுார், சீலியம்பட்டி, கீரிப்பட்டி, ஈச்சம்பட்டி, தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோழிக்கொண்டை, நாட்டு வகை ரோஜா, சம்மங்கி, குண்டு மல்லிகை, சன்னமல்லி, சாமந்தி உள்ளிட்ட பூ சாகுபடி பெருமளவு நடக்கிறது. மலர் மாலைகளில் கண்ணை கவரும் கோழிக்கொண்டை பூக்கள், இடை செருகலாக கோர்க்கப்படுகிறது. மாலை தொடுப்பதற்கு இப்பூக்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. இதனால் கோழிக்கொண்டை பூ வளர்ப்பில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். செலவு குறைவு, வருமானம் அதிகம் என்பதால் சாகுபடி பரப்பளவு உயர்ந்து வருகிறது. கோழிக்கொண்டை பூக்கள் செம்மண் நிலத்தில் தனி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. பாசன வசதியுள்ள சிறு, குறு விவசாயிகள் கோழிக்கொண்டை பூ செடிகளை அதிகளவில் வளர்க்கின்றனர். மொத்தம் 60 நாள் சாகுபடி பயிரான கோழிக்கொண்டையை ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்வதால் விவசாயிகளுக்கு இழப்பு இல்லாத பயிராக உள்ளது. ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்படுகிறது. 60 நாளில் பூக்கள் பூக்கும். 70 நாளில் பூக்கள் அறுவடை செய்யலாம். அதன்பின் 20 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து அறுவடை செய்கின்றனர். ஏக்கருக்கு 2 டன் பூக்கள் கிடைக்கும். கோழிக்கொண்டை பூ கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பட்டன் ரோஸ் பற்றாக்குறை ஏற்படும் நாட்களில் கோழிக்கொண்டை கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்தாண்டில் ஆயுத பூஜையில் கிலோ 50 ரூபாயாக இருந்தது. இந்தாண்டு ஆயுத பூஜையையொட்டி கிலோ 100 ரூபாயை தொடும் என விவசாயிகள் எதிபார்க்கின்றனர். கோழிக்கொண்டை சாகுபடியில் வருவாய் இழப்பு இல்லாவிட்டாலும் பூச்சி, வெயிலால் சேதம் ஏற்படுகிறது. 60 கி.மீ., துாரத்தில் உள்ள சேலம், துறையூர் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆத்துாரில் பூ மார்க்கெட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூ விவசாயிகள் வலியுறுத்தினர்.