சேலம் மாவட்டத்தில் நிரம்பிய அணைகள் மற்றும் நீர்நிலைகள் | Vasista river flooding | Attur
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறு, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 67.25 அடி நீர் மட்டம் கொண்டது. தொடர் மழையால் அணை நீர்மட்டம் 65.35 அடியை எட்டியது. அணை நிரம்பிய நிலையில் அணைக்கு 2வது நாளாக வினாடிக்கு 3,558 கன அடி தண்ணீர் வருகிறது. அணை பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 3,522 கன அடி உபரி நீர் வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் ஆத்தூர் அருகே பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியகோவில் அணை 52.49 அடி நீர்மட்டம் கொண்டது. தற்போது அணை நீர்மட்டம் 50.52 அடியை எட்டியது. அணை முழுவதும் நிரம்பிய நிலையில் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 975 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 975 கன அடி தண்ணீர் உபரிநீராக வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. கரியக்கோவில் மற்றும் ஆணைமடுவு அணைகளில் இருந்து 4,500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வசிஷ்ட நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆணைமடுவு அணையிலிருந்து வினாடிக்கு 1,522 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கரிய கோவில் அணையில் இருந்து 170 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஆணைமடுவு அணையில் 100 மில்லி மீட்டர் மழையும், கரியக்கோயில் அணைப்பகுதியில் 149 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளான இன்று அணையில் இருந்து வினாடிக்கு 4,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வசிஷ்ட நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆற்றுப் பகுதிகளில் கடந்து செல்லக் கூடாது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.