சுட்டெரிக்கும் வெயிலில் குடிநீர் தேடி 4 கி.மீ., நடக்கும் பெண்கள் | Drinking Water Demand
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் திருக்கோஷ்டியூர் ஊராட்சிக்கு உட்பட்டது சோலுடையான்பட்டி கிராமம். இங்கு 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக உள்ளது. இதனால் அங்கு அரசு தரப்பிலான குடிநீர் திட்டங்களில் இருந்து கிடைக்கும் நீரை சமைக்கவோ, குடிக்கவோ முடியாது. பல ஆண்டாக கிராம மக்கள் தினமும் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணிமுத்தாறு ஆற்றில் பள்ளம் தோண்டி உற்றுநீராக எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றுக்கு செல்லும் வழியில் கருவேலக் காடுகளாக இருப்பதால் பாதுகாப்பு கருதி பெண்கள் கூட்டமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆற்றில் சிறிது சிறிதாக ஊரும் நீரை மணிக்கணக்கில் காத்திருந்து குடங்களில் சேகரித்து 4 கிலோ மீட்டர் தலைச்சுமையாக வீடுகளுக்கு கொண்டு வருகின்றனர். இக்கிராம பெண்களின் வாழ்க்கை குடிநீருக்கென்று தினமும் பல மணி நேரம் ஒதுக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடு தோறும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து குடிநீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோலுடையானபட்டி கிராம பெண்கள் வலியுறுத்தினர்.