டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களை இழக்கும் அப்பாவி விவசாயிகள் | Destruction of Farmland|Kumbakonam
டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களை இழக்கும் அப்பாவி விவசாயிகள் / Destruction of Farmland / Kumbakonam சென்னை டு கன்னியாகுமரி வரை தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப்பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. இதற்காக பல்வேறு இடங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மிகக்குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கி பணிகள் நடக்கிறது. கும்பகோணம் சாக்கோட்டை - கருப்பூர் இடையே உள்ள திமுக பிரமுகர்களின் நிலத்தை கையகப்படுத்தாமல் விடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அதற்கு பதிலாக அப்பாவி விவசாயிகளின் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதோடு நிலங்களை அபகரித்து வருவதால் தொடர் போராட்டங்கள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக முனியாண்டவர் கோயில் பகுதியில் சாலை அமைக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கினர். விளை நிலங்களை கொத்துக் கொத்தாக ஜேசிபி வைத்து அழித்தனர். இதற்காக சாலையோரத்தில் இருந்த பழமையான மரங்களை வெட்டி அகற்றினர். அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் பருத்தி செடிகளை ஜேசிபி கொண்டு குழி தோண்டி புதைத்தனர். ஸ்பாட்டிற்கு விரைந்த தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜேசிபி கண்ணாடி உடைக்கப்பட்டது. அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து சதீஷ்குமார் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிகாரிகளை கண்டித்து பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்தது. ஆனால் இங்கு நடப்பதோ வேறு. திமுக பிரமுகர்களின் நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் தடுக்கும் வண்ணம் திட்டங்களை மாற்று வழியில் அமல்படுத்தி அப்பாவி விவசாயிகளின் விளை நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.