மத்திய தொல்லியல் அதிகாரிகள் குழு சல்லடை | Thanjavur Big Temple | Swami Idols Missing
மத்திய தொல்லியல் அதிகாரிகள் குழு சல்லடை | Thanjavur Big Temple | Swami Idols Missing | Inspection by a team of Archaeology Officials உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகள் மற்றும் அஷ்டதிக் பாலகர் எனப்படும் எட்டு திசைக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காவல் தெய்வங்களாக அக்னி தேவன், இந்திரன், எமன், நிருதி பகவான், வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் ஆகிய சிலைகள் அமைக்கப்பட்டது. அதில் குபேரன், இந்திரன், நிருதி பகவான் எமன் ஆகிய 4 சிலைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மாயமானது. மீதமுள்ள 4 சிலைகள் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மாயமான சிலைகளை மீட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்ய வேண்டும். பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்காக காவல் தெய்வக் கோயில்களை திறந்து விட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடத்திய நீதிமன்றம், இதுகுறித்து வரும் 28ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலர் அறவாழி தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பெரிய கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். மாயமான சிலைகள் இருந்த சன்னதிகள் பராமரிப்பு இன்றி இருட்டாக இருந்தது. அங்கு மொபைல் போன் வெளிச்சத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சன்னதியின் உயரம், அகலம் ஆகியவற்றை கணக்கீடு செய்து சன்னதிகளில் உள்ள சுவாமிகளையும் பார்வையிட்டனர். ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனக் கூறினர்.