தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தொகுதியில் அவலம்| Radhapuram Canal Renovation
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தொகுதியில் அவலம் / Radhapuram Canal Renovation / Farmers who took to the field / Trouble in Speakar Appavu Constituenvy / Nellai சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரம் கால்வாய் போதிய பராமரிப்பின்றி முட்புதர்கள் அடைத்து இருப்பதால் அணை நீர் திறந்தும் அதில் தண்ணீர் வரவில்லை. அதைத் தொடர்ந்து விவசாயிகள் களம் இறங்கி சீரமைத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஒன்று மற்றும் சிற்றாறு இரண்டு அணைகள் நிரம்பி வீணாகும் தண்ணீரை திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சி பகுதியான ராதாபுரம் தாலுகாவிற்கு திருப்பி விட காமராஜர் ஆட்சி காலத்தில் ராதாபுரம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 52 குளங்கள் நிரம்பி 17,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் திட்டமாகும். ஆண்டு தோறும் ஜூன் 16ம் தேதி கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதேபோல் கடந்த 16ம் தேதி சபாநாயகர் அப்பாவு, நிலப்பாறை பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விட்டார். ஆனால் 5 நாட்கள் ஆகியும் கால்வாயில் முறையாக தண்ணீர் வரவில்லை. 28 கி.மீ. துாரம் உள்ள ராதாபுரம் கால்வாயை துார்வாருவதற்கு 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும் பல இடங்களில் முட்செடிகள் அகற்றப்படாமல் நீர் வரும் பாதையில் தடைப்பட்டு கிடக்கிறது. இதனால் தண்ணீர் திறந்து விடப்பட்ட அன்றே நிலப்பாறையில் ஷட்டர் அடைக்கப்பட்டது. மேலும் 150 கன அடி தண்ணீர் திறக்க அரசாணை இருந்தும் 30 முதல் 50 கன அடி தண்ணீர் மட்டுமே கால்வாயில் திறந்து விடப்படுவதால் 52 குளங்களுக்கும் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராதாபுரம் கால்வாயில் அழகுநேரி பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்தவித துார்வாரும் பணியும் நடைபெறவில்லை. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள், தன்னார்வ அமைப்புகள் கால்வாயில் உள்ள முட்செடிகளை அகற்றி வருகின்றனர். ராதாபுரம் கால்வாயில் 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து கடைமடை குளம் வரை தண்ணீர் கொண்டு வர தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ரஜினி மற்றும் சமூக ஆர்வலர் ராதாபுரம் காமராஜ் கோரிக்கை விடுத்தனர்.