நெல்லையில் பயங்கரவாதி கைது | Nellai Crime Case
திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் சினிமா தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டு இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் 3 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயம் இல்லை. தியேட்டரில் சேதமும் இல்லை. இந்த வழக்கு தமிழக போலீஸ் தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.ரமேஷ் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மேலப்பாளையத்தில் முகாமிட்டு விசாரித்தனர். அமரன் படத்திற்கு எதிராக சித்தாந்த அடிப்படையில் தீவிரவாத நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்ட மேலப்பாளையம் அல்அமீன் நகரை சேர்ந்த இம்தியாஸ் வயது 42 என்பவர் தலைமறைவாக இருந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தலைமறைவாக இருந்த அவரை தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். தீவிரவாத அமைப்பை சேர்ந்த அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் ஏற்கனவே மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது முகமது புகாரி, முகம்மது யூசுப் ரஷீன், கோலா பாதுஷா, சிராஜுதீன், நிசார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.