நெல்லையில் பரபரப்பு |Nellai Mayor Ramakrishnan |Mayor House Incident |Tirunelveli Crime
நெல்லையில் பரபரப்பு |Nellai Mayor Ramakrishnan |Mayor House Incident |Tirunelveli Crime திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் ராமகிருஷ்ணன். டவுன் வேணு வன குமாரர் கோவில் தெருவில் வசிக்கிறார். அலுவல் பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு காரில் திரும்பினார். அப்போது, போதை ஆசாமிகள் இருவர், மேயரின் காரை வழிமறித்து, காரின் முன்பாக கீழே விழுந்தனர். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மேயர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டே வந்த ஒரு வாலிபர் மேயரின் வீட்டிற்குள் நுழைந்தார். அவரிடம் தற்போது மேயரை சந்திக்க முடியாது என அவரது உதவியாளர் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மற்றொரு வாலிபர் வீட்டின் மேல்தளத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், சில நிமிடங்களில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். வீட்டை விட்டு வெளியேறியபோது, அவரை எப்படியாவது தீர்த்துக்கட்டனும், என அவர்கள் பேசியதாக மேயரின் மருமகள் கூறினார். தொடர்ந்து வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டு, உடனடியாக டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்பாட்டுக்கு விரைந்த உதவி கமிஷனர் கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேயர் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவத்தை கேள்விபட்ட திமுக நிர்வாகிகள், மாநகராட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் மேயர் வீட்டின் முன்பு திரண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் மன்னிப்பு கேட்க மீண்டும் மேயர் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் மற்றொரு வாலிபரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் திருநெல்வேலி டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது அப்சல், வயது 25, அப்துல் அஜீஸ், வயது 23, என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேயர் வீட்டில் வாலிபர்கள் புகுந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.