ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிய கும்பல் சென்னையை சுற்றி தொடரும் கொள்ளை |ATM Robbery |ATM Machine Theft
ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிய கும்பல் சென்னையை சுற்றி தொடரும் கொள்ளை |ATM Robbery |ATM Machine Theft திருவள்ளூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்துக்கு வந்துள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி காவல் ஆணையர் மற்றும் வெள்ளவேடு போலீஸார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் இணைந்து ஏடிஎம் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். இதனிடையே, ஏடிஎம் மையம் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். முதல் கட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 700 பணம் நிரப்பப்பட்டிருந்த நிலையில், மர்ம கும்பல் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏடிஎம் மையத்தில் மர்ம கும்பல் எப்படி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது என்பதையும் விசாரித்து வருகின்றனர். மேலும், கடந்த 10 நாட்களில் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்ற 3-வது ஏடிஎம் கொள்ளை சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே புதுப்பேடு கிராமத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில், வடமாநில கும்பல் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடித்தது. இந்த வழக்கில் பவுன் குமார் தலைமையில் வட மாநில கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற 3-வது நாளிலேயே, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில், தற்போது கூடப்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தையே மர்ம கும்பல் தூக்கிச் சென்றிருப்பது, போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம கும்பலை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.