முன்விரோதத்தால் வெல்டர் கதை முடிப்பு: பொன்னேரியில் பரபரப்பு
முன்விரோதத்தால் வெல்டர் கதை முடிப்பு: பொன்னேரியில் பரபரப்பு Thiruvallur Crime |Welder |Beer Bottle Attack |Police Investigation திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள குன்னமஞ்சேரியைச் சேர்ந்தவர் சுனில், வயது 27. தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சுனில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அந்த நேரத்தில், ஆரணியாறு பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தவர் சுனில் என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கடந்த ஆண்டு சின்னக்காவனம் பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்வில் ஏற்பட்ட மோதலின் போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை சுனில் வெட்டியதாகவும், அந்த வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கில், காயமடைந்த நபரின் நண்பரான தீபன், சுனிலுடன் நண்பராக பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று சுனிலை மது அருந்த ஆரணியாறு பாலத்தின் கீழ் தனியாக அழைத்துச் சென்று, மது குடிக்க வைத்த பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத தீபன், பீர் பாட்டிலால் சுனிலின் முகத்தை கொடூரமாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான தீபனை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சுனிலின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவரது தாயும் பாட்டியும் கண்ணீர் மல்க கூறினர்.