தமிழ்நாடு மாநில பாட்மின்டன் அசோசியேஷன் | State Level Badminton Championship Competition | Tirupur
தமிழ்நாடு மாநில பாட்மின்டன் அசோசியேஷன் / State Level Badminton Championship Competition / Tirupur தமிழ்நாடு மாநில பாட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் 13 வயது பிரிவு சப் ஜூனியர் மாநில சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் பாட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் இப்போட்டிகள் திருப்பூர் மோகன்ஸ் பாட்மிண்டன் அகாடமி வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இதில் 13 வயது பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ஒற்றையர் மற்றும் இரட்டையர் அணி போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்கள் உட்பட மாநில அளவில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று இறுதிப் போட்டி நடந்தது. இதில் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த வேதாந்த்ராம், சென்னையைச் சேர்ந்த பிரணவை வெற்றி கண்டார். அதே போல் ஒற்றையர் பெண்கள் பிரிவில் திருச்சி நிதிக்சாவுடன் விளையாடி செங்கல்பட்டையை சேர்ந்த மிருதுளா வெற்றி பெற்றார். மேலும் பெண்கள் இரட்டையர் பிரிவில் சென்னை ஜெய்ஸ்ரீ மற்றும் செங்கல்பட்டு சுவேதா ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுடன் மதுரை அப்சானா மற்றும் நிஹரிகா ஆகியோர் விளையாடினர். ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில், துாத்துக்குடி இன்பான்ட் ஜூடோ மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த சோமேஸ்வரன் ஆகியோர் ஒரு அணியிலும், திருப்பூரைச் சேர்ந்த வேதாந்த்ராம் மற்றும் ஜெய்முகுந்தன் ஆகியோரும் விளையாடினர். இதில் திருப்பூர் மாணவர்கள் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி, அரையிறுதி போட்டி, கால் இறுதி மற்றும் அரையிறுதி மற்றும் கால் இறுதி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாநில சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா, மோகன்ஸ் பாட்மிண்டன் அகாடமி வளாகத்தில் நடந்தது. முன்னதாக மாநில அசோசியேஷன் பொருளாளர் மோகன் குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் அருணாசலம் பரிசுகளை வழங்கினார். மாவட்ட அசோசியேஷன் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ்மோகன், ராமகிருஷ்ணன், சுரேந்திரன், வினோத்குமார், முத்துக்குமரன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் முன்னிலை வகித்தனர். பரிசளிப்பு விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.