திருச்சியில் வாகன ஓட்டிகள் 'திக்திக்' | cracks in the walls of the cauvery bridge | trichy
திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் காவிரி பாலம் கடந்த 1976 ம் ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் - மாம்பழச்சாலை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இப்பாலம் பழுதடைந்ததால் 2022ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மூடப்பட்டு 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முழுவதும் முடிவடைந்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்துக்காக மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஒன்றை ஆண்டுகளில் தற்போது பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் மீண்டும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடை பயிற்சி செய்வோர், பாலத்தில் நின்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிப்போர் அச்சமடைந்தனர். விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தேவையில்லாமல் பாலத்தில் செல்லக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தரமற்ற முறையில் பாலத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட PWD கான்ட்ராக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இழப்பீட்டு தொகை வசூலித்து பாலத்தில் மீண்டும் தரமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.