உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / அதிகாலையில் இடித்து அகற்றப்பட்ட விநாயகர் கோயில் | Trichy | Demolished Vinayaka Temple

அதிகாலையில் இடித்து அகற்றப்பட்ட விநாயகர் கோயில் | Trichy | Demolished Vinayaka Temple

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர் ஊராட்சி காந்தி நகர் பகுதியில் வினை தீர்க்கும் விநாயகர் கோயில் உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கோயிலில் விநாயகர், முருகன், பைரவர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இக்கோயில் காந்திநகர் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் சாந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிபதி, கோயிலை அகற்ற உத்தரவிட்டார். விநாயகர் சதுர்த்தி விழா வந்ததால் செப்டம்பரில் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 12ம் தேதி கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசத்திடம் வார வழிபாட்டு மன்றத்தினர், இந்து அமைப்பினர் மனு கொடுத்தனர். மன்றத்தினர் ஐகோர்டில் மேல்முறையீடு செய்தனர். இதற்கிடையே சாந்தி மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் உத்தரவை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மனு தாக்கல் செய்தார். தனி நீதிபதி கோயிலை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தி வரும் 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 4 நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு வினை தீர்க்கும் விநாயகர் கோயிலை ஆர்டிஓ அருள் தலைமையில் அதிகாரிகள் குழு 2 ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர். ஏடிஎஸ்பி கோடிலிங்கம் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விடிந்து வந்து பார்க்கையில் கோயில் இருந்த இடம் தெரியாமல் இடித்து அகற்றப்பட்டது கண்டு பக்தர்கள் கண் கலங்கினர்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ