தக்காளி விலை குறைந்தாலும், கூடினாலும் நிலையான விலை கிடைப்பது உறுதி | Vitamins Unaltered tomato paper
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற கிராமத்து முதுமொழி உண்டு. நாட்டின் முதுகெலும்பு விவசாயமும், விவசாயிகளும் தான். நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு விளைவிக்கும் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. விளை பொருட்களின் விலை உயர்வு திடீரென ஏற்றமாகவும், இறக்கமாகவும் இருப்பது சாபக்கேடு. விளை பொருட்களுக்கு நிரந்த விலை கிடைக்கப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. விளை பொருட்களை சந்தைப்படுத்தலில் விவசாயிகளுக்கு எந்த ஒரு லாபமும் கிடைக்காது, அதேநேரம் புரோக்கர்கள் மற்றும் வியாபாரிகளே பெருமளவு லாபம் ஈட்டிவருகின்றனர். தற்போது விவசாய விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதை தவிர்த்து, அவை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக சந்தையில் வலம் வருகிறது. வேளாண்துறை மற்றும் தனியார் இயற்கை விவசாய மற்றும் விவசாய ஒருங்கிணைப்பு குழுக்கள் ஒன்று சேர்ந்து சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விவசாய குடும்பங்களுக்கு மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சியினை அளித்து விவசாயிகளையும் தொழில்முனைவோர்களாக மாற்றி வருவது பாராட்டுக்குரியது. அந்த வகையில் தக்காளி பழத்திலிருந்து தக்காளி கெட்ச் அப், சாஸ், பழரசம், ஜாம் தயாரிப்புகளையே பார்த்திருந்த நமக்கு புதிதாக தற்போது தக்காளி பேப்பர் என்ற மதிப்பு கூட்டப்பட்டபொருள் சந்தைக்கு வந்துள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உணவு மற்றும் ஊட்டச்சத்துதுறையின் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் சங்கீதாவின் நீண்டநெடிய ஆராய்ச்சியில் தக்காளி பேப்பர் உருவாக்கப்பட்டுள்ளது. ஜமால் முகமது கல்லூரி முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், செயலர் காஜா நஜ்முதீன், கிரியா நிறுவனர் டாக்டர் சிவபாலன், உணவு மற்றும் ஊட்டச்சத்துதுறையின் தலைவர் கவுஸ் பாஷா ஆகியோர் முன்னிலையில் தக்காளியின் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருளான தக்காளி பேப்பரை முனைவர் சங்கீதா அறிமுகப்படுத்தினார்.