உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாநகர் பிரபல டாக்டர் எடுத்த விபரீத முடிவு: பரபரப்பு தகவல் | Chennai doctor | Chennai | Crime

அண்ணாநகர் பிரபல டாக்டர் எடுத்த விபரீத முடிவு: பரபரப்பு தகவல் | Chennai doctor | Chennai | Crime

டாக்டர், மனைவி, 2 மகன்கள் தூக்கில் தொங்கிய பரிதாபம் வெளிவந்தது அதிர்ச்சி தகவல் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (53). டாக்டர். இவரது மனைவி சுமதி. வழக்கறிஞர். கொளத்தூரில் சொந்த வீடு இருந்தாலும், அண்ணாநகரில் கிளினிக் நடத்தியதால் திருமங்கலம் அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஜஸ்வந்த் பிளஸ் டூ முடித்திருந்தார் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இளைய மகன் லிங்கேஸ்குமார் அண்ணாநகரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் இன்று காலை டாக்டர் வீட்டில் சமையல் வேலை செய்ய ரேவதி வந்திருக்கிறார். ரேவதி கதவை நீண்ட நேரமாக தட்டியும், உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. டாக்டர் போனுக்கும், சுமதி போனுக்கும் மாறி மாறி போன் போட்டார், ரேவதி. ஆனால் யாரும் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த ரேவதி, டாக்டரின் டிரைவர் விஜய்க்கு போன் செய்து பதற்றத்துடன் விஷயத்தை சொன்னார். விஜய் வந்ததும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தனித்தனி மின் விசிறிகளில் டாக்டர் பாலமுருகன், மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த், லிங்கேஷ்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். ரேவதி கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த விஜய் உடனே போலீசுக்கு தகவல் சொன்னார். திருமங்கலம் போலீசார் விரைந்து சென்று, 4 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. டாக்டர் பாலமுருகனின் சொந்த ஊர் திருவண்ணாமலை. டாக்டரானதும் வேலைக்காக சென்னைக்கு வந்தார். கிளினிக், திருமணம் என இங்கேயே செட்டிலானார். மூத்த மகன் ஜஸ்வந்த்துக்கு மே மாதம் நீட் தேர்வு. முழுவீச்சில் தயாராகி வந்தார். இளையமகனையும் டாக்டராக்க முடிவு செய்து பிரபல பள்ளியில் சேர்த்திருந்தார். டாக்டர் பாலமுருகன் கிளினிக் நடத்திய அதே சமயத்தில், சென்னையில் நான்கு இடங்களில் ஸ்கேன் சென்டர் நடத்தினார்.. அண்ணாநகரில் 2 செங்குன்றத்தில் 2 ஸ்கேன் சென்டர்களை நடத்திவந்தார். அதற்காக, 5 கோடி ரூபாய் கடன் வாங்கி உபகரணங்களை வாங்கியிருந்தார். மாதம் 5 லட்சம் வரை வட்டி கட்டினார். ஆனால், ஸ்கேன் சென்டர்களில் அதற்கேற்ற வருமானம் இல்லை. ஒரு கட்டத்தில் வட்டி கட்டவே சிரமப்பட்டார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு சண்டை போடத் துவங்கியதால் மனமுடைந்து போயிருந்தார். கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். மனைவி சுமதி எவ்வளவோ ஆறுதல் கூறியும் பாலமுருகன் மனம் அமைதி அடையவில்லை. கடைசியில் அவர் முடிவுக்கு சுமதியும் இணங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே குடும்பத்தோடு தற்கொலை செய்யும் விபரீத முடிவை பாலமுருகன் எடுத்திருக்கலாம் என போலீசின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. நான்கு பேரும் தனித்தனியாக சேலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். உறவினர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இறப்புக்கான காரணம் உறுதியாக தெரிய வரும் என போலீசார் கூறினர்.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ