இது ஆறுதானா, கழிவுநீர் கால்வாயா? | 1000 Fishes Dead | Manimitharu River | Namakkal
சேலம் மாவட்டம், ஏற்காடு மலையடிவாரத்தில் துவங்கும் திருமணிமுத்தாறு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மதியம்பட்டி வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. ஆற்றின் ஓரத்தில் சாயப்பட்டறை ஆலைகள், ஜவ்வரிசி தயாரிப்பு மில்கள், கொலுசு பட்டறைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இரவோடு இரவாக ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் ஆற்று நீர் மாசடைந்து கறுப்பு நுரையுடன் ஓடுகிறது. ஆற்று நீர் மாசடைவதால் அதை நம்பியுள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. விவசாய நிலம் மலட்டுத்தன்மை அடைந்து மகசூல் குறைகிறது. பல ஆண்டாக இந்த அவலம் நீடிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், விவசாயிகள் பலமுறை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்சாலைகள், பட்டறைகளை ஆய்வு செய்வதும் சீல் வைப்பதும் நடக்கிறது. ஆனால் சில நாட்களிலேயே அதே தொழிற்சாலைகள், பட்டறைகள் மீண்டும் செயல்பட துவங்கி விடும். ஆற்று நீருடன் ஆலைக்கழிவுகள் கலந்து ஓடுவதால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.