முதல்வரின் கான்வாயில் சென்ற 19 கார்கள் பிரேக்டவுன்: மர்மம் என்ன? 19 innova cars break down MP CM mo
மத்தியப்பிரதேசத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக மோகன் யாதவ் இருக்கிறார். ரட்லம் நகரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தூரில் இருந்து முதல்வர் மோகன் யாதவ் புறப்பட்டார். முதல்வரின் பாதுகாப்புக்காக அவரது காருக்கு முன்னும் பின்னும் 20க்கு மேற்பட்ட கார்கள் சென்றன. போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அந்த கார்களில் இருந்தனர். வழியில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்க்கில் 19 கார்களுக்கு அதிகாரிகள் டீசல் போட்டனர். டீசல் நிரப்பிய பிறகு கார்களை வேகமாக ஓட்ட முடியாமல் டிரைவர்கள் திணறினர். பெட்ரோல் பங்க்கில் இருந்து ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 19 இன்னோவா கார்களும் வரிசையாக பிரேக் டவுன் ஆகி நின்றன. முதல்வரின் கார் மட்டும் வேகமாக சென்று குறிப்பிட்ட நேரத்தில் ரட்லம் நகருக்கு போய் சேர்ந்தது. மற்ற கார்கள் எல்லாம் பிரேக் டவுன் ஆனதாக உயரதிகாரிகள் கூறியதும் முதல்வர் மோகன் யாதவ் அதிர்ச்சியடைந்தார். விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனிடையே, கார்கள் அடுத்தடுத்து பிரேக் டவுன் ஆகி நின்றதால், டிரைவர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளருடன் சண்டை போட்டனர். தண்ணீர் கலந்த டீசல்தான் காரணம் என குற்றம்சாட்டினர். இதனால் மக்களும் அங்கு குவிந்துவிட பெட்ரோல் பங்க்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கூடுதல் கலெக்டர் ஷாலினி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பெட்ரோல் பங்க்கில் இருந்த டீசல் ஸ்டோரேஜ் டேங்க்கை செக் செய்தனர். அப்போதுதான், டீசலில் தண்ணீர் கலந்திருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் உடனடியாக சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். முதல்வரின் பாதுகாப்பு கான்வாயில் சென்ற 19 கார்கள் பிரேக் டவுன் ஆகி நின்ற சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் முதல்வரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கில் உள்ள டீசல் டேங்க்கில் பாதிக்கு பாதி தண்ணீர் கலந்தது எப்படி? என விசாரணைக்கு ம.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.