2வது இந்து இளைஞர் கொலை வங்கதேசத்தில் மீண்டும் அச்சம் 29-year-old Amrit Mondal alias Samrat
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் கலவரமாக மாறியது. 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா தப்பி ஓடினார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. வங்கதேச அரசின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற முகமது யூனுஸ், வங்கதேசத்தில் பொதுத் தேர்தலை நடத்த முயற்சித்தார். அதன் பலனாக, அடுத்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரங்களுக்கு ேஷக் ஹசீனா ஆதரவாளர்கள்தான் காரணம் என பாதுகாப்பு படையினர் கூறி வரும் நிலையில், ஹசீனாவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்கு தலைமை வகித்த மாணவர் அமைப்பின் தலைவர் ெஷரீப் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தலில் போட்டியிட முடிவு செய்து பிரசாரம் செய்தபோதுதான் அவரை மர்ம நபர்கள் சுட்டு விட்டு தப்பிச்சென்றனர். இதனால் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபடத் துவங்கினர். அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் மைமென்சிங் மாவட்டத்தில் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இந்து தொழிலாளி திபு சந்திர தாசை போராட்டக்காரர்கள் அடித்துக் கொன்றனர். பிறகு, மரத்தில் சடலத்தை கட்டி வைத்து எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், திபு சந்திர தாஸ் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதால் அடித்துக் கொல்லப்பட்டதாக, வங்கதேச போலீசார் காரணம் கூறினர். இந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்தும் சிறுபான்மையினரை பாதுகாக்க தவறிய வங்கதேச அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, திபு சந்திர தாஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முகமது யூனுஸ், குடும்பத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இந்த பரபரப்பான சூழலில் இன்னொரு இந்து இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ராஜ்பாரி டவுன் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த கொலை நடந்துள்ளது. கொல்லப்பட்ட இந்து இளைஞர் 29 வயது நிரம்பிய அம்ரித் மண்டல் என்ற சாம்ராட் என தெரிய வந்துள்ளது. அம்ரித் வசித்து வந்த Hosendanga ெஹாசன்டங்கா கிராமத்தைச் சேர்ந்த மக்களே அவரை கொடூரமாக அடித்துக் கொன்றிருக்கின்றனர். திபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் உண்டான அதிர்ச்சி அடங்குவதற்குள், இன்னொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டிருப்பது வங்கதேச இந்துக்கள் மத்தியில் இன்னொரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கொல்லப்பட்ட இளைஞர் அம்ரித் மண்டல் ஒரு ரவுடி என வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர். அம்ரித் மண்டல் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் செயல்பட்டு வந்தது. அந்த கும்பல், அதே கிராமத்தை சேர்ந்த ஷாஹிதுல் இஸ்லாம் என்பவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது. கொள்ளையர்கள் மிரட்டுவதாக ஷாஹிதுல் இஸ்லாம் குடும்பத்தினர் கதறியதை அடுத்து ஊர் மக்கள் திரண்டு வந்தனர். அம்ரித் மண்டலை தவிர மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதனால், கிராம மக்கள் ஆவேசத்துடன் அம்ரித் மண்டலை அடித்துக் கொன்று விட்டனர் என வங்கதேச போலீசார் கூறுகின்றனர். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு கலவரம் நடந்தபோது, அம்ரித் மண்டல் நாட்டை விட்டு தப்பிச் சென்று இந்தியாவுக்குள் புகுந்து விட்டதாக போலீசார் கூறினர். கலவரம் ஓய்ந்த நிலையில் மீண்டும் ெஹாசன்டங்கா கிராமத்துக்கு திரும்பி குற்றச்செயல்களில் ஈடுபட்டபோதுதான் மக்கள் அவரை அடித்துக் கொன்றதாக போலீசார் கூறுகின்றனர். அம்ரித் மண்டல் மீது ஒரு கொலைவழக்கு உள்ளிட்ட 2 குற்ற வழக்குகள் இருப்பதாக, ராஜ்பாரி உதவிபோலீஸ் கமிஷனர் Debrata Sarkar தெப்ரதா சர்க்கார் கூறினார். ஆனால் இந்த சம்பவத்துக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையையும் அரசு ஆதரிக்காது. வன்முறை கும்பல் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என வங்கதேச அரசு கூறியுள்ளது. ஆனால், இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது என இந்தியா மீண்டும் கண்டனம் தெரிவிக்கும் என்ற அச்சத்தில் வங்கதேச போலீசார் உண்மைகளை திரித்து கூறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொல்லப்பட்ட அம்ரித் ஒரு ரவுடி என போலீசார் கூறினாலும் கூட, இப்போதைய கலவரச் சூழலில் ஒரு இந்து இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது சிறுபான்மையினரான இந்துக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.