உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு காதலியை முடிக்க 2 காதலிகள் துணை: திடுக்கிடும் பின்னணி | Abdul Hafiz | yercaud | Salem crime case

ஒரு காதலியை முடிக்க 2 காதலிகள் துணை: திடுக்கிடும் பின்னணி | Abdul Hafiz | yercaud | Salem crime case

இன்ஸ்டா காதலில் மதம் மாறிய பெண் ஊசி ஏற்றி கதை முடித்த அப்துல் ஹபீஸ்! காதலனே எமனானது ஏன்? சேலத்தை உலுக்கும் பகீர் காதலனுக்காக மதம் மாறவே தயாராக இருந்த காதலியை அப்துல் ஹபீஸ் என்ற இளைஞன் கொடூரமான முறையில் கொன்று ஏற்காடு மலைப்பாதையில் வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவனும் கொலைக்கு உடந்தையாக இருந்த, அவனது வேறு 2 காதலிகளும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பதற வைக்கும் பயங்கர சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம். கொலை செய்யப்பட்ட இளம்பெண் பெயர் லோகநாயகி, வயது 32. திருச்சி மாவட்டம் துறையூர் தான் சொந்த ஊர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு போலீசார் பெண்ணின் உடலை மீட்டு, அருகே கிடந்த தடயங்களை சேகரிக்க தொடங்கினர்.பெண் இறந்து கிடந்த இடத்தின் அருகிலேயே அவரது ஹேண்ட் பேக் இருந்தது. பெண்ணின் புகைப்படம், அவரது ஐடி கார்டு, மகளிர் விடுதியில் பணம் கட்டியதற்கான ரசீது என பல தடயங்கள் கிடைத்தன. அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொத்த விவரங்களும் போலீசாருக்கு தெரியவந்தன. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் லோகநாயகி. இவர் சேலத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் விடுதியில் இருந்து வெளியே சென்ற லோக நாயகி, பின்னர் விடுதிக்கு திரும்பவில்லை. அவருக்கு போன் போட்டால் சுவிட்ச் ஆப் என்று வந்தது. ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்த விடுதி வாடன் போலீசில் புகார் செய்தார். லோகநாயகியின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அவருக்கு ஒரு நம்பரில் இருந்து அடிக்கடி போன் வந்ததும், கடைசி நேரத்தில் கூட அதே நம்பரில் இருந்து போன் வந்ததையும் கண்டுபிடித்தனர். அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, அது பெரம்பலூரை சேர்ந்த அப்துல்ஹபீஸ் என்ற கல்லூரி மாணவனுடையது என்று தெரியவந்தது. அவன் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. உடனே பெரம்பலூர் விரைந்த போலீசார் அப்துல்ஹபீசை பிடித்து விசாரித்தனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தங்கள் பாணியில் போலீஸ் விசாரித்த போது, உண்மையை ஒப்புக்கொண்டான். லோகநாயகியை கொன்று ஏற்காடு மலைப்பாதையில் வீசி விட்டேன் என்று போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தான். அவன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியது: பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் தெருவை சேர்ந்த மாணவன் அப்துல் ஹபீஸ். அவனுக்கு 22 வயது தான் ஆகிறது. பிஇ 4ம் ஆண்டு படித்து வந்தான். இன்ஸ்டாகிராம் மூலம் லோகநாயகி அவனுக்கு அறிமுகமாகி இருக்கிறார். இருவரும் நட்பாக பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதல் வயப்பட்டனர். அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். என்ன ஆனாலும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இருவரும் ஒருவருக்கொருவர் உத்தரவாதம் கொடுத்தனர். அப்துல் ஹபீசும் தனது உத்தரவாதத்தில் உறுதியாக இருந்ததால் அடிக்கடி அவனுடன் தனிமையில் சந்தித்து இருக்கிறார் லோகநாயகி. இருவரும் பல இடங்களுக்கு சென்று இருக்கின்றனர். பல முறை உறவை வைத்துக்கொண்டனர். லோகநாயகியும் அப்துல் ஹபீசும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். காதலனுக்காக லோகநாயகி மதம் மாறவும் தயாராக இருந்திருக்கிறார். இதற்காக முஸ்லிம் பெண்கள் போல் அடிக்கடி பர்தா அணிந்துகொள்வது, தலையில் முக்காடிட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி இருக்கிறார். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீரென லோகநாயகியை அவாய்ட் செய்ய ஆரம்பித்து இருக்கிறான் அப்துல் ஹபீஸ். இதனால் அவர் இடிந்து போனார். இது பற்றி அப்துல் ஹபீசிடம் கேட்டபோது, ‛உன் வயது 32. ஆனா எனக்கு 22 வயசு தான் ஆகுது. இவ்ளோ வயசு வித்தியாசத்தோட கல்யாணம் பண்ணிக்கிறது நடைமுறையில சாத்தியம் இல்லனு அப்துல் ஹபீஸ் சொல்லி இருக்கிறான். இது லோக நாயகியை ஆத்திரம் அடைய வைத்தது. ‛ஒவ்வொரு முறை உன்னுடன் தனிமையில் இருக்கும் போதும், நீ என் கணவன் என்று நினைத்து தான் எல்லாவற்றுக்கும் ஓகே சொன்னேன். நாம் பல முறை ஒன்றாக இருந்து விட்டோம். இனி கல்யாணம் செய்து தான் ஆக வேண்டும். உன்னை தவிர வேறு யாரையும் என்னால் கல்யாணம் பண்ண முடியாது. இதற்காக நான் எந்த எல்லைக்கும் போவேன் என்று லோகநாயகி அதிரடி காட்டி இருக்கிறார். இது அப்துல் ஹபீசுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவன் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் பழகி வந்தான். அவர்களில் யாரையாவது கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். லோகநாயகியிடம் உல்லாசம் அனுபவித்து ஒரு கட்டத்தில் விட்டு விடலாம் என்று கணக்கு போட்டு இருக்கிறான். ஆனால் லோகநாயகி உண்மையாக காதலித்ததாலும், அவனை தவிர வேறு யாரையும் கட்டமாட்டேன் என்று சொன்னதாலும் அப்துல் ஹபீசுக்கு தலைவலி ஆரம்பித்து இருக்கிறது. இனி லோகநாயகியை கொன்றால் தான், தான் நிம்மதியாக வாழ முடியும் என்று அப்துல் ஹபீஸ் நினைத்தான். இது பற்றி தனது இன்னொரு காதலியான சென்னை ஆவடியை சேர்ந்த தாவியா சுல்தானாவிடம் கூறி இருக்கிறான். சுல்தானாவுக்கு வயது 22. ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அப்துல் ஹபீஸ் திட்டமிட்டு இருந்தான். சுல்தானா பல ஐடியா கொடுத்து இருக்கிறார். அவை எதுவும் சரிவரவில்லை. அப்போது தான் மூன்றாவது காதலி மோனிஷா நியாபகம் அவனுக்கு வந்தது. காரணம் மோனிஷா பிஎஸ்சியில் மயக்கவியல் தொழில்நுட்ப பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தவர். உடனே மோனிஷாவுக்கு போன் போட்டு கொலைக்கான ஐடியா கேட்டு இருக்கிறான். நேரடியாக விவரத்தை சொன்னால் மோனிஷா ஐடியா தரமாட்டார் என்று கருதிய அப்துல் ஹபீஸ், லோகநாயகி ஒரு கொலைகாரி; எனது உறவினரை கொன்றுவிட்டாள். அவளை கொலை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறான். அவனுக்கு மோனிஷா தான் ஊசி போட்டு கொல்லும் ஐடியாவை கொடுத்தார். இதையடுத்து கொலை திட்டத்தை வகுத்தான் அப்துல் ஹபீஸ். சில பொய்களை கூறி ஒரே நேரத்தில் காதலிகள் சுல்தானா, மோனிஷாவை வரவழைத்தான். அவர்களை பைக்கில் ஏற்றிக்கொண்டு சேலம் புறப்பட்டான். சேலம் சென்றதும் லோகநாயகிக்கு போன் போட்டு கூப்பிட்டான். காதலன் அழைத்ததும் அவர் உற்சாகத்தில் வந்தார். அவரிடம் சுல்தானாவும், மோனிஷாவும் தனது தோழிகள் என்று அறிமுகம் செய்து வைத்தான். பின்னர் சேலத்தில் டிரைவர் இல்லாத ஒரு காரை வாடகைக்கு எடுத்தான். பைக்கை சேலத்திலேயே விட்டுவிட்டு, காரில் மூன்று காதலிகளுடன் ஏற்காடு புறப்பட்டான். காரை அப்துல் ஹபீஸ் ஓட்டி சென்றான். மலை பாதையில் பாதி தூரம் சென்றதும் 60 அடி பாலம் வந்தது. அதில் காரை நிறுத்தினான். ஆள் யாரும் வராததை உறுதி செய்தான். ஏற்கனவே போட்ட கொலை திட்டம் படி, அப்துல் ஹபீசும் சுல்தானாவும் லோகநாயகியை வாயை பொத்தி இறுக்கமாக பிடித்துக்கொண்டனர். மறுநொடியே அளவுக்கு அதிகமான மயக்க மருந்து அடைத்த ஊசியை லோகநாயகி உடலில் ஏற்றினார் மோனிஷா. சில நிமிடங்களில் காரிலேயே லோகநாயகி இறந்தார். ஆள் யாரும் வராத நேரத்தில் லோகநாயகி சடலத்தை, மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் தூக்கி வீசினர். பின்னர் எதுவும் நடக்காதது போல வீட்டுக்கு சென்று விட்டனர் என்று அப்துல் ஹபீஸ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். அப்துல் ஹபீசையும் அவரது வாக்குமூலம் அடிப்படையில் அவரது காதலிகள் சுல்தானா, மோனிஷாவையும் போலீசார் கைது செய்தனர். லோகநாயகி உடலை வீசிய இடத்தை கைதான அப்துல் ஹபீஸ் அடையாளம் காட்டினான். அங்கு லோகநாயகி சடலம் பாதி அழுகிய நிலையில் இருந்தது. அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்பாட்டில் ஒரு ஹேண்ட் பேக் கிடைத்தது. அதில் லோகநாயகியின் போட்டோக்கள், ஐடி கார்டு, கொஞ்சம் பணம் இருந்தது. அவர் தங்கி இருந்த விடுதிக்கு பணம் கட்டிய ரசிதும் இருந்தது. லோகநாயகியை அதிக அளவில் மயக்க மருந்து அடைத்த ஊசி போட்டு கொன்றார்களா அல்லது வெற்று ஊசியை ஏற்றி கொலை செய்தார்களா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் இதில் தெளிவு கிடைக்கும் என்று போலீசார் கூறினர். கைது செய்யப்பட்ட அப்துல் ஹபீஸ், அவனது காதலிகள் சுல்தானா, மோனிஷா ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி