பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் பகீர் வாக்குமூலம் | Abu bakr siddique | Anti-Terrorism Squad
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக், வயது 60. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது அலி வயது 48. பயங்கரவாதிகளான இவர்கள் மீது, கோவை குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இருவரையும் தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திராவில் கடந்த 1ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அபுபக்கர் சித்திக் அளித்துள்ள வாக்குமூலம் அதிர வைக்கிறது. மாணவ பருவத்திலேயே எனக்கு பயங்கரவாத செயல்கள் மீது நாட்டம் அதிகம். கோவையில் தொடர் குண்டுவெடிப்புகளை முன்னின்று நடத்திய பாஷா, எங்கள் ஊருக்கு வந்து நடத்திய ரகசிய கூட்டங்களில் பங்கேற்றேன். அவர் தான் போலீசாரிடம் சிக்காமல் இருப்பது உட்பட பல்வேறு வித்தைகளை கற்றுக் கொடுத்தார். பாஷாவின் வழிகாட்டுதலில், கோவையில் 1998ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பங்கேற்க இருந்த கூட்டத்தில் குண்டுகள் வைத்தேன். கோவையில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய பின், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு தப்பி விட்டேன். அங்குள்ள பயங்கரவாதிகளுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தான் எனக்கு அடைக்கலம் கொடுத்தனர். அவர்கள் மூலமாக சட்ட விரோதமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி பெற்றேன். மீண்டும் மும்பை திரும்பி, அங்கிருந்து வேலை தேடுவது போல துபாய் தப்பி விட்டேன். துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன். பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்தேன். இது, என் உறவினர் ஒருவருக்கு பிடிக்கவில்லை. நாகூரில் வசிக்கும் அவர், நான் துபாயில் இருப்பது பற்றி, போலீசாரிடம் தெரிவித்து விட்டார். தமிழக போலீசாரும் என்னை பிடிக்க, துபாய் வந்துவிட்டனர். கூட்டாளிகள் வாயிலாக தகவல் கிடைத்ததும், அங்கிருந்து தப்பி விட்டேன். அதன்பின், ஆந்திரா சென்று, மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்தேன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூவரும் என் சீடர்கள். இவர்கள் தான் வேலுாரில் ஹிந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன், பா.ஜ., நிர்வாகி டாக்டர் அரவிந்த்ரெட்டி உள்ளிட்டோரை கொலை செய்தனர். மூவரும் கேட்கும் போதேல்லாம் வெடிகுண்டுகளை தயாரித்து கொடுப்பேன். கொலைகளை செய்து விட்டு எப்படி தப்பிக்க வேண்டும் என்பது பற்றி, தெளிவாக வகுப்பு எடுப்பேன்; பணமும் கொடுப்பேன். என் திட்டம் எப்போதும் தோற்றது இல்லை. நான் சொன்ன வேலையை, பக்ருதீன் உள்ளிட்டோர் கச்சிதமாக செய்து முடிப்பார்கள். சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிக்கு இரண்டு முறை வந்து, தலா, 50 கிலோ வெடி மருந்துகளை வாங்கிச் சென்றுள்ளேன். கொரோனா பரவல் காலத்தில், நானும் முகமது அலியும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்பவர்கள் போல, ஹரியானா சென்றோம். அங்கு கள்ளத்துப்பாக்கிகள் வாங்கி வந்து ஆந்திராவில் பதுக்கினோம் என அபுபக்கர் சித்திக் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.