மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்குமா? | Actor Vijay | TVK | State convention | Postpone
2026 சட்டசபை தேர்தலை முன்வைத்து ஆளுங்கட்சியான திமுக மக்களை சந்திக்கும் வகையில் பல்வேறு புதிய பெயரில் முகாம்களை நடத்தி கவர்ந்து வருகிறது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுதும் மக்களை சந்தித்து இப்போதே பிரச்சாரம் செய்து வருகிறார். பாமக தலைவர் அன்புமணியும் தன் பங்குக்கு மக்களை சந்திக்க 100 நாள் நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். 2026 தேர்தலை குறி வைத்தே புதிதாக கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய், கடந்த ஆண்டு கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டத்தில் பிரமாண்டமாக நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தென்மாவட்ட ஓட்டுகளை குறிவைத்து மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 25ல் கட்சியின் 2வது மாநில மாநாடு நடத்த முடிவு செய்துள்ளார். இதற்காக போலீஸ் அனுமதி கேட்டு, கடந்த 16ம் தேதி மதுரை எஸ்.பி., அரவிந்திடம் கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் கடிதம் கொடுத்திருந்தார். இதுவரை போலீஸ் அனுமதி தராததால், நேற்று மீண்டும் எஸ்.பி.யை சந்தித்தார் ஆனந்த். அப்போது, போலீஸ் தரப்பில் மாநாட்டை தள்ளி வைக்க கேட்டுக் கொண்டதாக மதுரை தவெகவினர் தரப்பில் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 27ல் விநாயகர் சதுர்த்தி வருவதால், அதற்கு 2 நாட்களுக்கு முன்பே, மதுரை மாநகர் முழுதும் ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் . அதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருப்பதால், ஆகஸ்ட் 25ல் நடத்த திட்டமிட்டிருக்கும் தவெக மாநில மாநாட்டுக்கு முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.