நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்ட சிறையில் சிக்கிய பொருட்கள் actor darshan| bengaluru prison raid
பாத் ரூம் குழாய்க்குள் செல்போன்கள் ஆம்லெட் போட எலக்ட்ரிக் ஸ்டவ்! சிறை ரெய்டில் அதிர்ச்சி கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், தமது ரசிகர் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ராவுக்கு ரேணுகாசாமி ஆபாச மெசேஜ் அனுப்பியதன் பின்னணியில் இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த தர்ஷன், சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகார் எழுந்தது. சிறைக்குள் ரவுடி நாகா உள்ளிட்டோருடன் நடிகர் தர்ஷன் சிகரெட், டீ கப் பிடித்தபடி ஹாயாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் போட்டோ, சிறைக்குள் வீடியோ காலில் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். சிறை அதிகாரிகள், ஊழியர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிறைக்குள் தர்ஷனுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தது ரவுடி நாகா என்பது விசாரணையில் தெரிந்தது. சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சனியன்று சோதனை நடத்தினார். குறிப்பாக ரவுடி நாகா அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் சோதனை நடந்தது. இதில், 1.30 லட்சம் மதிப்புள்ள 15 மொபைல் போன்கள், டீ, காபி, ஆம்லெட் உள்ளிட்ட உணவு தயாரிக்க வைத்திருந்த 7 எலக்ட்ரிக் ஸ்டவ், 5 கத்திகள், 3 மொபைல் போன் சார்ஜர்கள், 2 பென் டிரைவ்கள், 36 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சிக்ரெட் மற்றும் பீடி பாக்கெட்கள், தீப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. 4 போன்கள் பவர் கன்ட்ரோல் அறையில் உள்ள காலி ஸ்விட்ச் பாக்ஸ்க்குள் இருந்தன. பாத்ரூம் தண்ணீர் குழாய்க்குள் 11 செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.