உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமானத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கதை ahmedabad plane crash seat 11a | survivor vishwas kumar

விமானத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கதை ahmedabad plane crash seat 11a | survivor vishwas kumar

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் டேக் ஆப் ஆகும் போது வெடித்து சிதறிய சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. ஏர்போர்ட்டை ஒட்டி அமைத்திருக்கும் மேகானிநகர் மெடிக்கல் காலேஜ் மெஸ் மற்றும் விடுதியில் விழுந்து விமானம் வெடித்தது. ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்து முடிந்து விட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உடல் சிதறி இறந்தனர். இதுவரை 204 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருத்தர் கூட பிழைக்க வாய்ப்பில்லை என்று ஆமதாபாத் போலீஸ் கமிஷனர் கூறிய சில நிமிடங்களில், பயணி ஒருவர் உயிர் தப்பிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. துயர சம்பவத்திலும் ஒருவர் உயிர் தப்பிய தகவல் ஆறுதல் தருவதாக இருந்தது. விமானம் நொறுங்கிய இடத்தில் இருந்து அவர் ஆம்புலன்ஸ் நோக்கி நடக்கும் காட்சி வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உயிர் தப்பியவர் பெயர் ரமேஷ் விஷ்வாஸ் குமார் வயது 40. பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். 20 ஆண்டுகளாக பிரிட்டனில் தான் வசிக்கிறார். ஆனால் குஜராத்தை பூர்விகமாக கொண்டவர். விமானம் தரையில் விழுந்து வெடிக்கும் வீடியோ வெளியான போது, இதில் யாருமே பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் விஷ்வாஸ் குமார் மறுஜென்மம் எடுத்து இருக்கிறார். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்பதை பார்ப்போம். விஸ்வாஷ் குமார் உயிர் தப்புவதற்கு முக்கிய காரணம் அவரது சீட் இருந்த இடம். அவர் 11ஏ என்ற இருக்கையில் பயணம் செய்து இருக்கிறார். உயிர் தப்பி ஆம்புலன்சில் ஏறும்போது கூட அவரிடம் அந்த டிக்கெட் இருந்தது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் போயிங் 787 ரகத்தை சேர்ந்தது. இதில், 11ஏ சீட் பிசினஸ் கிளாஸ் இருக்கைகளுக்கு அடுத்து இருக்கிறது. அதாவது, பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் முடிந்து, எக்கானமி கிளாஸ் துவங்கும் இடத்தில் முதல் வரிசையில் ஜன்னல் ஓரமாக அந்த சீட் அமைந்திருக்கிறது. பிசினஸ் கிளாஸ், எக்கானமி கிளாஸ் இரண்டுக்கும் நடுவில் அவசர கால கதவு இருக்கிறது. இந்த கதவுக்கு அடுத்து தான் 11ஏ சீட் உள்ளது. விமானம் தரையில் மோதி வெடிப்பதற்கு ஓரிரு நொடிகள் முன்பாக அசர கால கதவு வழியாக கீழே குதித்து தப்பி இருக்கிறார் விஷ்வாஸ் குமார். விமானம் டேக் ஆப் ஆன 35 விநாடிகளில் தரையில் மோதி வெடித்து சிதறி விட்டது. டேக் ஆப் ஆனதும் நன்றாக தான் பறந்தது. சிறிது உயரம் சென்றதும், மேற்கொண்டு உயர பறக்க முடியவில்லை. அப்படியே கீழ் நோக்கி தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. படிப்படியாக உயரம் குறைந்து மெடிக்கல் காலேஜ் மெஸ், விடுதி மேல் விழுந்தது. விமானம் கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்ததும், விமானம் ஆபத்தில் சிக்கி இருப்பதை உணர்ந்த பைலட் மேடே அலர்ட் கொடுத்தார். அடுத்த சில விநாடிகளில் விமானம் வெடித்து சிதறியது. இதெல்லாம் 35 விநாடிகளில் நடந்து விட்டது. சுதாரிக்க கூட நேரம் இல்லாத இந்த இக்கட்டான நொடிகளிலும் விஷ்வாஸ் குமார் உயிர் தப்பியது ஆச்சர்யம் தான். விமானம் ஆபத்தில் சிக்குவதற்கு முன்பு மிகப்பெரிய சத்தம் கேட்டு இருக்கிறது. அதன் பிறகு தான் விமானம் கீழ் நோக்கி பறக்க ஆரம்பித்தது. சத்தம் கேட்டதுமே சுதாரித்த விஷ்வாஸ் குமார், விமானம் தரையை நோக்கி மோத போவதை பார்த்து அவசர கால கதவு வழியாக குதித்து உயிர் தப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி அவர் கூறும் போது, எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் கண் திறந்த போது, என்னை சுற்றி சடலங்கள் கிடந்தன. சிலர் ஆம்புலன்ஸ் நோக்கி என்னை அழைத்து சென்றார்கள். விமானம் விபத்துக்குள்ளாகும் போது மிகப்பெரிய சத்தம் கேட்டது. அது மட்டும் தான் எனக்கு நினைவு இருக்கிறது. என்னோடு என் தம்பி அஜர் குமார் ரமேசும் வந்தான். அவன் வேறு சீட்டில் இருந்தான். இப்போது அவன் நிலை தான் என்னவென்று தெரியவில்லை என விஸ்வாஸ் குமார் சொன்னார். ஆமதாபாத் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தலை, கால், மார்பு பகுதிகளில் காயம் இருக்கிறது. அவரால் உடனடியாக அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து இருக்க வாய்ப்புள்ள ஒரே நபராக இப்போதைக்கு விஷ்வாஸ் குமார் மட்டுமே இருக்கிறார். அவர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்தால் விபத்துக்கான காரணம் தெரியவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் விமானத்துக்கு என்ன நடந்து இருக்க கூடும் என்பதை கண்டுபிடிக்க விசாரணை மற்றும் ஆய்வு நடந்து வருகிறது.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை