கருவில் வளரும் சிசுவுக்கு முதுகு ஆபரேஷன் - டெல்லி எய்ம்ஸ் சாதனை|AIIMS Delhi First OpenFetal Surgery
தாயின் கருவில் வளரும் 25 வார கருவுக்கு சிக்கலான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பிடலில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் இதுபோன்று கரு அறுவை சிகிச்சை செய்யப்படுவது இந்தியாவிலேயே இதுவே முதல்முறையாகும். சில மாதங்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கர்ப்பிணி அட்மிட் செய்யப்பட்டார். அவரது கருவில் வளர்ந்த பெண் குழந்தைக்கு மைலோ-மெனிங்-கோசீல் (Myelomeningocele) எனப்படும் முதுகு தண்டுவடப் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இது ஒரு நரம்பு குழாய் குறைபாடாகும். இதனால் குழந்தையின் முதுகு தண்டுவடம் வளர்ச்சி குன்றி, கருவுக்கு உள்ளேயே முதுகின் ஒரு பகிதி வெளியே பிதுங்கி தொங்கியது. இந்தக் குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால், வாழ்நாள் முழுவதும் கால்கள் செயல்படாமல் போகும். பக்கவாத பாதிப்புகள் இருக்கும். சிறுநீரகப் பாதிப்பு மற்றும் மூளையில் நீர் கோர்த்துக்கொள்வது போன்ற சிக்கல் வார வாய்ப்புள்ளது. இதனால் கருவிலேயே அதனை சரி செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கொண்ட டாக்டர்கள், நர்ஸ்கள், அதிநவீன நுண்ணோக்கிகள் மற்றும் ஸ்கேன் கருவிகளை பயன்படுத்தி ஆபரேஷன் தொடங்கினர். தாயின் கருப்பைக்குள் வளரும் சிறிய குழந்தையின் முதுகில் இருந்த குறைபாட்டை துல்லியமாகச் சரிசெய்தனர். இந்தச் சவாலான ஆபரேஷன் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின் குழந்தை மீண்டும் தாயின் கருப்பைக்குள் பத்திரமாகத் திரும்ப செலுத்தப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆபரேஷனை எய்ம்ஸ் ஆஸ்பிடலின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா, மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நீனா மல்ஹோத்ரா, டாக்டர் அபர்ணா சர்மா தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நிறைவேற்றினர். கடந்த சில மாதங்களாக இதற்கான ஒத்திகைகளிலும், பரிசோதனைகளிலும் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அதிநவீன கரு அறுவை சிகிச்சைகளுக்கு வெளிநாடுகளில் பல லட்சங்கள் செலவாகும். ஆனால், ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு மத்திய அரசின் ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் ஜானனி சிசு சுரக்சா திட்டங்களின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்; டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தை இருவருமே நலமுடன் உள்ளனர். இந்த சாதனை இந்திய மருத்துவ நிபுணர்களின் அபார திறமை, நவீன மருத்துவ சிகிச்சை வழங்குவதில் நமது அரசின் வளர்ச்சியை காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIIMSDelhi #FetalSurgery #MedicalMilestone #SpinaBifida #HealthcareIndia #IndianDoctors #PediatricSurgery #PublicHealthcare #MedicalBreakthrough #CurrentAffairs #NewsUpdates #India #HealthNews