உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமான விபத்துக்கு பின்னால் காத்திருந்த சவால் | Coffin makers | Air India crash

விமான விபத்துக்கு பின்னால் காத்திருந்த சவால் | Coffin makers | Air India crash

குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடக்கிறது. அவர்களது உடலை அடக்கம் செய்யவும், சொந்த ஊருக்கு அனுப்பவும் சவப்பெட்டிகள் தயார் செய்ய வதோராவில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பங்களுக்கு கண்ணியத்துடன் அனுப்ப இரவு பகலாக உழைக்கிறோம் என சவப்பெட்டி தயாரிப்பாளர் ஆதேஷ் ராஜ்வாடி கூறினார். ஜூன் 13ம் தேதி இரவு 10.30க்கு சவப்பெட்டிகள் தயாரிக்க வேண்டும் என ஆர்டர் வந்தது. ஏர் இந்தியா அதிகாரிகள் எத்தனை தயாராக இருக்கிறது என என்னிடம் கேட்டனர். நாங்கள் சவப்பெட்டிகளை இருப்பில் வைத்திருப்பதில்லை. ஆர்டர் எவ்வளவு வருகிறதோ அதற்கு ஏற்ப தயாரிப்போம் என கூறினேன். இப்போதைக்கு 50 அவசரமாக வேண்டும் என்றனர். அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் அழைத்து 100 வேண்டும் என்றனர். அடுத்த சில மணி நேரங்களில் 250 முதல் 270 வரை வேண்டும் என்றனர். எங்கள் வாழ்நாளில் இவ்வளவு பெரிய ஆர்டரை நாங்கள் பார்த்தது இல்லை. முதல்கட்டமாக இரண்டே நாளில் 100 சவப்பெட்டிகள் தயாரிப்பது சவாலாக இருந்தது. ஒரு சவப்பெட்டி செய்ய 2 முதல் 3 மணி நேரமாகும். என்னிடம் உள்ள 8 தொழிலாளர்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக வேலை பார்த்தனர். ராணுவத்தில் இறந்த தியாகிகளுக்கு தயாரிப்பு போலவே வடிவமைத்தோம். ஒவ்வொரு பெட்டியும் 6 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி உயரம் கொண்டது. ஜூன் 13 இரவு 11 மணிக்கு தொடங்கி மறுநாள் காலைக்குள் 35 பெட்டிகள் தயாரித்தோம். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். விபத்தில் கருகிய உடல்கள் உள்ளே வைக்கப்படும் என்பதால் கசிவு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு சவப்பெட்டியின் உள்ளேயும் பிளாஸ்டிக் ஷீட்களை வைத்தோம். உள்ளேயும் வெளியேயும் அலுமினியத் தாள்கள், வெள்ளை நிற துணி கொண்டு தயார் செய்தோம். இதன் மூலம் மூன்று நாட்கள் வரை இறந்தவர்கள் உடலை விமானத்தில் பாதுகாப்பாக எடுத்து செல்ல முடியும். பொதுவாக ஒரு சவப்பெட்டி தயாரிக்க 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். மனிதாபிமான அடிப்படையில் கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு சேர்த்து 3000 ஆயிரம் மட்டுமே வசூலிக்கிறோம் என ஆதேஷ் ராஜ்வாடி கூறியுள்ளார்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை