உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விபத்துக்கு முன் சில நொடிகளில் நடந்த சம்பவம் | Air India Crash | May Day |

விபத்துக்கு முன் சில நொடிகளில் நடந்த சம்பவம் | Air India Crash | May Day |

ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டேக் ஆப் ஆன ஒரு சில வினாடிகளில் விழுந்து நொறுங்கியது நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர், தரையில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் 12ம் தேதி மதியம் சரியாக மதியம் 1:38 மணிக்கு 23வது ரன்வேயில் இருந்து டேக் ஆப் ஆனது. அடுத்த சில நிமிடங்களில் விமானம் ஆபத்தில் சிக்கியது. ரன்வேயில் இருந்து டேக் ஆப் ஆன அடுத்த 5 நிமிடத்தில் விமானம் வெடித்து விட்டது. அதாவது, மதியம் 1:43 நிமிடத்துக்கு விமானம் விபத்தில் சிக்கி இருக்கிறது. 625 அடி உயரத்தில் இருந்து அப்படியே கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது. விமானம் விழுந்து வெடித்த இடம் மருத்துவ கல்லூரிக்கான விடுதி. அதில் மருத்து கல்லூரியை சேர்ந்த டாக்டர்கள் தங்கி இருந்தனர். பலரும் பலத்த காயம் அடைந்தனர். இதனால் விமான பயணிகள் எண்ணிக்கை தாண்டி இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இந்த சோகத்துக்கு மத்தியில் இன்னும் பெரிய பேரழிவு தடுக்கப்பட்டிருக்கிறது என்கிறனர் உள்ளூர் மக்கள். விபத்து நடந்த பகுதிக்கு அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் விமானம் தாழ்வாக பறப்பதை பார்த்துள்ளனர். குடியிருப்பு பகுதியை நோக்கி வந்த விமானம் விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் விடுதியை நோக்கி திரும்பி உள்ளது. கடைசி நேரத்தில் பைலட்கள் விமானத்தை விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால், அந்த விமானம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து 2,000 பேர் வரை இறந்திருப்பார்கள். ஒட்டுமொத்த காலனியும் அழிந்திருக்கும். இறுதி நொடியில் பைலட்கள் விமானத்தை விடுதி பக்கம் திருப்பியதால்தான் மிகப்பெரிய பேரழிவு தடுக்கப்பட்டது. பைலட்களின் சாமர்த்தியத்தால் நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம் என ஆமதாபாத் ஏர்போர்ட் அருகில் குடியிருப்பவர்கள் கூறினர். பொதுவாக விமானம் மேலே எழும்பும் போதும், கீழே இறங்கும் போதும் தான் அதிகம் விபத்தில் சிக்கும். அதுவும் விமான மேலே எழும்பும் போது விபத்தில் சிக்கினால் பேரழிவை உண்டாக்கும். ஏனென்றால் அந்த விமானம் பயணிக்க தேவையான மொத்த எரிபொருளும் அதன் இறக்கை பகுதியில் லோட் செய்யப்பட்டிருக்கும். கீழே விழுந்தால் மொத்த எரிபொருளும் தீ பிடிக்கும். அதாவது பெரிய அளவிலான பல குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தது போல அதன் தாக்கம் இருக்கும். ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தும் அப்படி தான். லண்டன் வரை 9 மணி நேரம் பயணிக்க கூடிய அளவில் 1 லட்சம் லிட்டருக்கு மேல் பெட்ரோல் அதில் இருந்தது. கடைசியாக மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து மொத்தமும் வெடித்து சிதறும் போது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உண்டாகி இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு எரிமலை வெடிப்புக்கு சமம் ஆகும். இதனால் தான் விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் சென்றும் கூட உடனே மீட்பு பணி துவங்குவது தாமதமானது. அவர்கள் PPE எனப்படும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருந்தும், அதையும் தாண்டி விமான வெடிப்பின் வெப்பம் தாக்கி உள்ளது. இதே விமானம் விடுதி கூரையின் மீது விழுந்ததால் தான் அங்கு தங்கியிருந்த மாணவர்களோடு பாதிப்பு முடிந்தது. இதுவே குடியிருப்பு பகுதியில் தரையில் விழுந்து இருந்தால், விமான எரிபொருளின் பரவல் தூரம் அதிகரித்து பெரிய பேரழிவு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ