விமான இடிபாடுகளில் இருந்து கிடைத்த DVR | Air india flight crash | Ahmedabad | Video recorder | DVR f
குஜராத்தின் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இண்டியா பயணிகள் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 265ஐ எட்டியுள்ளது. ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் டேக் ஆப் ஆன அடுத்த சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரை தவிர 241 பேரும் இறந்த நிலையில், விமானம் மெடிக்கல் காலேஜ் கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது பலி எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இத்தனை உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர விபத்து நடந்த இடத்தில் நேற்று முதல் நடந்து வந்த மீட்பு பணிகள் முடிந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய இந்த விபத்திற்கான காரணங்கள் பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை தெரிந்துகொள்ள உதவும் விமானத்தின் கருப்பு பெட்டி இன்று காலை மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் கடைசியில் என்ன தவறு நடந்தது என்பது குறித்த முக்கியமான தகவல்கள் இருக்கும் கருப்பு பெட்டி, இன்னும் மீட்கப்படவில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. வெடித்து சிதறிய விமானத்தின் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சி நடக்கிறது. தேடுதலின் ஒரு பகுதியாக இடிபாடுகளில் சிக்கி இருந்த டிவிஆர் எனும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். விமானத்தின் இடிபாடுகளில் இருந்து டிவிஆர் கிடைத்திருப்பதாகவும், தடயவியல் நிபுணர்கள் அதனை ஆராய உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். மீட்கப்பட்ட டிவிஆரில் விமானத்தின் உள்ளே நடந்த முக்கியமான சிசிடிவி காட்சிகள், பைலட் அறையில் நடந்தவை பதிவாகி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துக்கு முந்தைய இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள இந்த டிவிஆர் உதவும் என்றும் தெரிகிறது