பட்டாசுக்கு நிரந்தர தடை: அரசு முடிவெடுக்க உத்தரவு
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காற்றின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தீபாவளியன்று இன்னும் மோசமானது. தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்த தவறிய டெல்லி அரசு மற்றும் காவல்துறையை கண்டித்த சுப்ரீம் கோர்ட், அது பற்றி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இதற்கு பதில் அளித்து டெல்லி காவல்துறை இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு விசாரித்தது. டெல்லி போலீசாரின் நடவடிக்கைகள் போதுமான இல்லை என்று கூறிய நீதிபதிகள் தெரிவித்தனர். டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய சிறப்பு பிரிவை அமைக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டனர். தடையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தனிப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டனர். மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை என்பது அரசியல் அமைப்பின் 21வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமை. எங்களுக்கு தெரிந்து எந்த மதமும் மாசுபாட்டை உருவாக்கும் எந்த செயலையும் ஊக்குவிப்பது இல்லை; மக்களின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்து கொள்வதும் இல்லை. எனவே பட்டாசுகளுக்கு நிரந்தர தடை விதிப்பது தொடர்பாக நவம்பர் 25ம் தேதிக்குள் டெல்லி அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.