2013ல் கமலுக்கு வந்த அதே சிக்கல் மீண்டுமா? | Amaran | Kamal | Red Giant Movies | Sivakarthikeyan
சென்னையை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் 2014ல் காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இறந்தார். இவரது வீரத்தை பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான அசோக் சக்ரா அவரது மனைவி இந்துவிடம் வழங்கப்பட்டது. இப்போது முகுந்த் வாழ்க்கை வரலாற்றை தழுவி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் அமரன் என்கின்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் தயாரித்துள்ள இந்த படத்தை துணை முதல்வர் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. 2013ல் கமல் தயாரித்த விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்ட சிக்கலை போலவே அமரன் படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமரன் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர். இதேபோல் அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.