பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை Amit shah at Poonch Visit
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் முறையாக இன்று ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திற்கு சென்றார். பாகிஸ்தான் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதி மக்களுக்கு அமித் ஷா ஆறுதல் கூறினார். பாக்., தாக்குதலில் கடும் பாதிப்பை சந்தித்த குருத்துவாராவில் வழிபாடு செய்த அமித் ஷா, அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். சேதம் உயிரிழப்பு குறித்து குருத்துவாரா நிர்வாகிகள் அமித் ஷாவிடம் விளக்கினர். தொடர்ந்து பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட அமித் ஷா, உயிரிழந்தோரின் உறவினர்களை சந்தித்து பேசினார். பிறகு மத்திய அரசின் சார்பில் மக்களுக்கு உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்றிய அமித் ஷா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து பிஎஸ்எப் வீரர்களை சந்தித்த அமித் ஷா, எல்லையில் அவர்கள் ஆற்றும் தன்னலமற்ற பணியை பாராட்டினார்.