ரயிலில் தம்பதிக்கு நடந்தது என்ன? பகீர் வீடியோ: ரயில்வே விளக்கம்|Andhra Pradesh | Railway police
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கருகுபில்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சிம்மாசலம் வயது 25. ஐதராபாத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கும் பக்கத்து கிராமமான அங்கவத்தைச் சேர்ந்த பவானி வயது 19 என்பவருக்கும் 2 மாதங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடித்துவிட்டு மனைவியுடன் ஐதராபாத்தில் உள்ள ஜகத்கிரிகுட்டா காந்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக கடந்த 18ம் தேதி இரவு மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் செகந்திராபாத்தில் இருந்து சிம்மாசலத்துக்கு மனைவியுடன் புறப்பட்டார். இந்நிலையில், வங்கப்பள்ளி ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் இருவரும் இறந்து கிடந்தனர். தண்டவாளத்தை ஆய்வு செய்ய சென்ற ரயில்வே ஊழியர், கொடுத்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் புதுமணத் தம்பதியர் ரயிலில் சண்டைபோடுவதை சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், ரயில் படிக்கட்டில் நின்று பயணித்தபோது கணவனும், மனைவியும் வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். தம்பதி வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியான பிறகு, அந்த ரயில் பெட்டியில் பயணித்தவர்களிடம் விசாரித்தோம். அப்போது, புதுமண தம்பதி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கோபித்துக் கொண்ட மனைவியை, கணவர் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். சக பயணிகளும் சமாதானப் படுத்த முயற்சித்துள்ளார். இதையடுத்து தான் மனைவி பவானி திடீரென ஓடிச் சென்று ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். மனைவி குதித்த அதிர்ச்சியில் கண்ணிமைக்கும் நேரத்தில் கணவனும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். ரயில் வேகமாக சென்றதால் குதித்த உடன் இருவரும் உடல் சிதறி இறந்துள்ளனர் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.