கொலையாளிகளோடு ராஜிவ் குடும்பம் கைகோர்ப்பதா? rajiv| rahulgandhi| priyanka| anusiya| congress
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தமிழக போலீசில் கூடுதல் எஸ்பியாக இருந்து ஓய்வு பெற்ற அனுசுயா. ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு மாநில செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரசில் இருந்து அனுசியா திடீரென விலகி இருக்கிறார். அதற்கான காரணத்தை அவர் சொன்னார். ராஜிவை கொல்ல விடுதலை புலிகள் நடத்திய குண்டுவெடிப்பில் என் இடது கை முழுவதும் பாதிக்கப்பட்டது. என்னை போல பலரும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எங்களுக்கு ஆதரவாக ராஜிவ் குடும்பத்தினர் இருப்பார்கள் என்று நம்பி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். ஆனால், கொலையாளிகள் மீது ஆத்திரம் காட்ட வேண்டிய ராஜிவ் குடும்பம், ஆதரவு, பரிவு காட்டத்தொடங்கியது. வேலூர் சிறையில் இருந்த நளினியை சிறைக்கே சென்று சந்தித்தார் பிரியங்கா. என்ன நடந்தது என்ற உண்மையை தெரிந்து கொள்வதற்காக போனார் என்று சொன்னார்கள். என்னை போன்றவர்களும் அதை நம்பினோம். ஆனால், கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுல் பிரசாரம் செய்யும்போது, வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா சந்தித்தது பற்றி சொன்னார். நளினிக்காக தானும் குடும்பத்தினரும் மன வேதனை பட்டதாக தெரிவித்து இருந்தார். கொலையாளிக்காக பரிந்து பேசும் ராகுல், பிரியங்கா ஆகியோர், குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை.