பெண் பகீர் புகார்! அரக்கோணம் திமுக நிர்வாகி நீக்கம் | DMK | Arakkonam DMK Person | Udhayanidhi
ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசெயல். இவர் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். தெய்வசெயல் மீது அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி திருமண மோசடி புகார் மற்றும் 20க்கும் மேற்பட்ட பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக புகார் கூறினார். அவர் அளித்த பேட்டி தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏ ரவி தலையிட்ட பிறகே அரக்கோணம் மகளிர் போலீசார் தெய்வச்செயல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த துடிக்கும் திமுக நிர்வாகிகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என அதிமுக பொது செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். நாளை அரக்கோணம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த சூழலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தெய்வச்செயல் மீது ஆக்சன் எடுத்துள்ளார். தெய்வச்செயலை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கவியரசு என்பவர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். கல்லூரி மாணவியின் குற்றச்சாட்டே இந்த நீக்கத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.