இப்போது போகலாம் நிச்சயம் மீண்டு(ம்) வருவார்: அதிஷி | Arvind kejriwals resigns | Atishi claimed the
டில்லியில் புதிய மதுபான கொள்கை முடிவு செய்ததில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ முதல்வராக இருந்த கெஜ்ரிவாலை கைது செய்தது. 6 மாதங்களாக சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு நீண்ட இழுபறிக்கு பின் 2 வழக்குகளிலும் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. ஜாமின் கொடுத்தாலும் முதல்வர் அலுவலகத்தின் உள்ளே செல்ல கூடாது. பைல்களில் கையெழுத்து போடக் கூடாது. பொது இடங்களில் மதுபான ஊழல் வழக்கு குறித்து பேச கூடாது என பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. முதல்வர் பதவியை கெஜ்ரிவால் தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாத அளவு சுப்ரீம்கோர்ட் கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்தது. இதை உணர்ந்த கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய முதல்வராக கல்வி அமைச்சர் அதிஷி மர்லினாவை கைகாட்டினார். மாலை கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்த கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பதவி பிரமாணம் செய்து வைக்க கோரும் கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் அதிஷி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருப்பது கட்சிக்கும் டில்லி மக்களுக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் என அதிஷி தெரிவித்துள்ளார். இப்போது அவர் ராஜினாமா செய்தாலும், மீண்டும் கெஜ்ரிவாலை முதல்வர் ஆக்குவதில் டில்லி மக்கள் தீர்க்கமாக இருக்கின்றனர். எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை உண்டு. தேர்தல் நடக்கும் வரை நான் டில்லியை பார்த்துக் கொள்வேன் எனவும் கூறினார்.