பெண் அதிகாரிகளை விமர்சித்தவருக்கு மகளிர் ஆணையம் கண்டனம் ashoka university professor arrested | Opera
ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் அலி கான் மக்முதாபாத். அரசியல் அறிவியல் துறையின் தலைவராக உள்ளார். அண்மையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்து சமூகவலைதளத்தில் இவர் பதிவிட்ட கருத்து சர்ச்சையானது. குறிப்பாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் நடத்திய ஊடக சந்திப்புகளை அவர் விமர்சித்திருந்தார். இது வெறும் பாசாங்கு என்றும் கூறியிருந்தார். கும்பல் கொலை மற்றும் புல்டோசர் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையுடன் ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையானது. இது தொடர்பாக டெல்லி பாஜக இளைஞர் அணியினர் போலீசில் புகார் அளித்தனர். அலிகானுக்கு மாநில மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது. மே 15ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சொன்னது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. புகாரின் அடிப்படையில் பேராசிரியர் அலி கான் மக்முதாபாத் கைது செய்யப்பட்டார். இது குறித்து மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா கூறுகையில், நாட்டின் மகள்களான கர்னல் ஷோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு சல்யூட். அரசியல் அறிவியல் பாடத்தை கற்பிக்கும் ஒரு பேராசிரியர், ராணுவ அதிகாரிகளை அப்படி விமர்சித்து இருக்க கூடாது. குறைந்தபட்சம் அவர் கமிஷன் முன் ஆஜராகி வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தோம் ஆனால், அவர் வரவில்லை என்றார். பேராசிரியர் அலிகான் பதிவிட்டது அவரது சொந்த கருத்து என்று அவர் பணியாற்றிய அசோகா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.