அசாமில் லாரி மீது மோதிய மினி பஸ்: 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு | Assam Accident
மினி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல் 20க்கும் மேற்பட்டோருக்கு நிகழ்ந்த சோகம் அசாமின் காஜிரங்கா வனவிலங்கு பூங்கா அருகே, 35 பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பஸ், எதிரே வந்த லாரி மீது மோதியது. இரு வாகனங்கள் மோதிக் கொண்ட பலத்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்து ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, பஸ்சில் இருந்து பலர் நிலைகுலைந்து கிடப்பதை பார்த்து, உடனே உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உடனே போலீசாருக்கு தகவல் தரப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீசார் உறுதிப்படுத்தினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டோர், அரசு ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, கோலாகாட் எஸ்எஸ்பி ஸ்வப்னநீல் தேகா கூறியதாவது: மினி பஸ்சில் பயணித்த பெரும்பாலானோர் மாணவர்கள். வனவிலங்கு பூங்கா இடம் பெற்றுள்ள பகுதியில் விதிகளை மீறி படுவேகமாக பஸ் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியதால், அதில் இருந்த 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மீதமுள்ளோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மினி பஸ்சில் வந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது பற்றி விசாரிக்கிறோம் என்றார். சம்பந்தப்பட்ட வாகனம், ஏற்கனவே 12 முறை விதி மீறலில் ஈடுபட்டுள்ளதும், பல முறை அபராதம் கட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு உடனே சென்று, காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கும் படி, தொகுதி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.