படுதோல்வியை சந்தித்தார் எதிரணி பிரதமர் வேட்பாளர் Anthony Albanese | Second term win| Australian el
151 இடங்களை கொண்ட ஆஸ்திரேலிய பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சியை எதிர்த்து லிபரல் கட்சி போட்டியிட்டது. இன்று தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2022ல் ஆட்சி அமைத்த தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அறுதிப் பெரும்பான்மைக்கு 76 இடங்கள் போதும் என்ற நிலையில், தொழிலாளர் கட்சிக்கு 78 இடங்கள் கிடைத்தன. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அவரை எதிர்த்து லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பீட்டர் டட்டனுக்கு (Peter Dutton) 30 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் அவரது சொந்த தொகுதியிலேயே அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என கூறப்பட்டது. அதன்படியே அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பிரதமர் அல்பானீஸுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாகவே இருந்தது. அதற்கு விலைவாசி உயர்வு, பண வீக்கம், வீட்டு வசதி சிக்கல்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டது. லிபரல் கட்சி வேட்பாளர் பீட்டர் டட்டன் அந்தச் சூழலை தனதாக்கிக்கொண்டு வெற்றி பெற பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவர் அறிவித்த திட்டங்களில் சில, அமெரிக்க தேர்தலில் டிரம்ப் அறிவித்த வாக்குறுதிகள் போலவே இருந்தன. அமெரிக்காவில் இப்போதைய சூழலை ஒப்பிட்டுப் பார்த்த ஆஸ்திரேலிய வாக்காளர்கள், அந்தோணி அல்பானீஸே தேவலாம் என்ற நிலைக்கு வந்து, அவரையே மீண்டும் வெற்றி பெறச் செய்துள்ளனர். பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல், சிறந்த சுகாதார பராமரிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டுவருதல் போன்றவற்றில் அவருடைய வலுவான பிரசாரம் வெற்றிக்கு வழி வகுத்தது. அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி போருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை அந்தோணி அல்பானீஸ் பிரசாரத்தில் முன்னெடுத்துச் சென்றார். அது அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையும் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் என்ற சிறப்பை அந்தோணி அல்பானீஸ் பெற்றுள்ளார். இந்த தருணம் தனது வாழ்வில் சிறப்பானது என அவர் கூறி உள்ளார்.