38 உயிர்... விமானத்தில் குண்டு வீசியதே ரஷ்யா தான் azerbaijan flight | kazakhstan flight crash Russia
கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டு இருந்தது. 2 பைலட், 3 ஊழியர்கள், 62 பயணிகள் என மொத்தம் 67 பேர் விமானத்தில் இருந்தனர். அந்த விமானம், கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் நகர் பகுதியில் வெடித்து சிதறியது. சம்பவ இடத்திலேயே 2 பைலட் உட்பட 38 பயணிகள் இறந்தனர். 29 பேர் உயிர் தப்பினர். விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாவி மக்கள் சென்ற விமானத்தை ரஷ்யா தான் சுட்டுப்பொசுக்கியது என்று அஜர்பைஜான் அரசாங்கம் குற்றம் சாட்டியது. உக்ரைன் நாட்டின் ட்ரோன்களை சுடுகிறேன் என்று கூறி, பயணிகள் விமானத்தை சுட்டு, 38 பேர் உயிரை பறித்து விட்டார்கள் என்று ரஷ்யா மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அதை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது. ‛நாங்கள் ஒருபோதும் இதை செய்யமாட்டோம். இருப்பினும் இது பற்றி விசாரித்து சொல்கிறோம். வதந்தி பரப்பாதீர்கள் என்றது. ஆனால், ரஷ்யா தான் விமானத்தை சுட்டது என்று அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் Elham Aliyev அடித்து சொன்னார். ஆனால் ரஷ்யா ஒருபோதும் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. இந்த நிலையில் அஜர்பைஜான் விமானத்தை சுட்டுத்தள்ளியது ரஷ்யா தான் என்ற உண்மை 9 மாதங்கள் கழித்து இப்போது வெளியே வந்து விட்டது. அதை ரஷ்ய அதிபர் புடினே சொல்லி இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தஜிகிஸ்தானில் நடக்கும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாமை புடின் சந்தித்தார். அப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ‛ரஷ்யாவின் எல்லையை தாண்டி உக்ரைனின் 2 ட்ரோன்களை நாங்கள் தொடர்ச்சியாக பின் தொடர்ந்தோம். அவற்றை குறி வைத்து 2 ஏவுகணைகளை அனுப்பி விட்டோம். அதில் ஒன்று விமானத்துக்கு பக்கத்தில் வெடித்து சிதறியது. விமானம் மீது நேரடியாக படவில்லை என்றாலும், அதன் தாக்கத்தால் விமானமும் வெடித்தது. நடக்க கூடாதது நடந்து விட்டது. இந்த துயர சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று புடின் சொன்னார்.