வங்கதேச கலவரத்தில் தப்பிய மாணவர் பரபரப்பு பேட்டி | Indian medical students escape bangladesh
தீ வைக்க வந்த கலவர கும்பல் 15 இந்திய மாணவர்களை கடவுள்போல காப்பாற்றிய இளைஞர் வங்கதேசத்தில் நடந்து வரும் கலவரத்தில் இந்திய மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்காவில் உள்ள டெல்டா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த அசாமைச் சேர்ந்த அப்பாஸ் அலி உட்பட 15 மாணவர்கள் ஹாஸ்டலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இந்தியா தப்பிச் செல்ல வங்கதேச இளைஞர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி தப்பிப்பது என 15 பேரும் யோசித்தனர். உடன் படிக்கும் வங்கதேச மாணவரின் நண்பர் உதவிக்கரம் நீட்டினார். வங்க தேச இளைஞர் உதவியது பற்றி அப்பாஸ் அலி கூறியதாவது: நாங்கள் 15 பேரும் தப்பிச் செல்ல ஒரு ஆம்புலன்சை வங்கதேச இளைஞர் ஏற்பாடு செய்தார். 19ம்தேதி மாலை 5 மணிக்கு டாக்காவில் இருந்து கொல்கத்தா புறப்படும் விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தோம். 18 ம்தேதி இரவு 8 மணிக்கு எங்களை அந்த இளைஞர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றார். நாங்கள் நாலைந்து நாளாக சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்தோம். அதனால் முதலில் தனியார் ஆஸ்பத்திரிக்கு எங்களை அழைத்துச்சென்று சாப்பாடு வாங்கி தந்தார். நள்ளிரவில் ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டோம். ஒரு இடத்தில் போராட்டக்காரர்கள் ஆம்புலன்சை மறித்துவிட்டார்கள். உள்ளே நோயாளி இருப்பதாக டிரைவர் பொய் சொன்னார். போராட்டக்காரர்கள் நம்பாமல் ஆம்புலன்சில் ஏறி பார்த்தனர். இந்திய மாணவர்கள் இருப்பதை பார்த்ததும் ஆத்திரமடைந்தனர். பொய் சொன்ன டிரைவரை சரமாரி அடித்து உதைத்தனர். ஆம்புலன்சை உருட்டுக்கட்டையால் தாக்கினர். தீ வைத்து எரிக்க முயன்றனர். நாங்கள் பயந்து விட்டோம். உடனே, அந்த வங்கதேச மாணவர் போராட்டக்காரர்களுடன் பேசினார். 15 பேரும் நம்ம நாட்டுக்கு படிக்க வந்தவங்க.. அவங்க மேல எந்த தப்பும் இல்லையே.. இந்த நேரத்துல அவங்களுக்கு உதவுறதுதான் மனிதாபிமானம். அதான் 2 நாட்டுக்கும் நல்லது. இல்லன்னா பிரச்னை பெரிதாயிடும். என கெஞ்சி கூத்தாடி எப்படியோ போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி எங்களை காப்பாற்றினார். போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பி ஒருவழியாய் ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஏர்போர்ட்டிலேயே காத்துக் கிடந்தோம். தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞரால் நாங்கள் பத்திரமாக இந்தியா வந்தோம் என மாணவன் அப்பாஸ் அலி கூறினார். டெல்டா கல்லூரியில் நான் போன மாதம்தான் மருத்துவம் படிக்க சேர்ந்தேன். எனது படிப்பு கேள்விக்குறியாகி விட்டது. வங்கதேசத்தில் விரைவில் அமைதி திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் மாணவன் அப்பாஸ் அலி சொன்னார்.