பெசன்ட் நகர் விழாவில் பரபரப்பு; யார் அந்த வாலிபர்? Annai Velankanni church feast Besant Nagar
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேற்று தேர் திருவிழா நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பிறகு, குடும்பம் குடும்பமாக எலியட்ஸ் பீச்சில் குவிந்திருந்தனர். இரவு 11 மணியளவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அடித்துக் கொண்டனர். வாலிபர் ஒருவரை கும்பல் கத்தியால் குத்திவிட்டு ஓடியது. பீச்சில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் ( எ) ராஜன்(28) என தெரியவந்தது. மனைவி திவ்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஓராண்டுக்கு முன் பிரிந்து விட்டார். தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார். பெசன்ட் நகர் சர்ச்சுக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு ஜெயராஜ் சென்றுள்ளார். அங்குதான் கொல்லப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. சடலத்தின் அருகே 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நின்றிருந்தார். ஓட்டேரியை சேர்ந்த அந்த பெண்ணை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வாலிபர் கொல்லப்பட்டு கிடப்பதை வேடிக்கை பார்க்க வந்ததாக, கூறினார். பிறகு, அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலை பின்னணி தெரிய வந்தது.