அமெரிக்காவில் நடந்த சந்திப்பு மோடி, பைடன் பேசியது என்ன? pm modi| Us president biden| biden modi meet
குவாட் நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு, இந்தோ -பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பாதுகாப்பு கூட்டாண்மை, ஆளில்லா விமானங்கள் கொள்முதல் மற்றும் ராணுவ கூட்டு பயிற்சிகள் குறித்து விவாதித்தனர். இந்தியாவின் ஆயுதப்படைகளின் கண்காணிப்பு மற்றும் உளவு திறன்களை மேம்படுத்த அமெரிக்காவின் MQ-9B பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியா வாங்கியதை பைடன் வரவேற்றார். ராணுவ பயன்பாட்டிற்கான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் தயாரிப்பில் இந்தியா- அமெரிக்கா நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தம் செய்தது தொடர்பாகவும் மோடி- பைடன் விவாதித்தனர். கொல்கத்தாவில் புதிய செமி கண்டக்டர் ஆலை அமைப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். தேசிய பாதுகாப்பு, அடுத்த தலைமுறைக்கான தொலைத்தொடர்பு, பசுமை ஆற்றல், தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்கு செமி கண்டக்டர் ஆலைகள் உதவும் என அவர் பாராட்டினர்.