உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகார் வாக்காளர் திருத்த பட்டியலில் முறைகேடு நடப்பதாக புகார்! Bihar Bandh | Rahul alligation on Vote

பீகார் வாக்காளர் திருத்த பட்டியலில் முறைகேடு நடப்பதாக புகார்! Bihar Bandh | Rahul alligation on Vote

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜ - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. மற்றொரு பக்கம் நிதிஷிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்துவிட வேண்டும் என, ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கங்கணம் கட்டித் திரிகிறார். ஆர்ஜேடி கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெற்று, காங்கிரசின் பலத்தை நிரூபிப்பதற்காக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மாநிலம் முழுதும் சுற்றி சுழன்று பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி நடந்துள்ளது. போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என சில கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்தன. இதையடுத்து, வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து, சிறப்பு திருத்த சுருக்க பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போலி வாக்காளர்களை நீக்குவதற்கு பதிலாக, ஏழை, எளிய வாக்காளர்களை நீக்கிவிட்டு, பாஜவுக்கு ஆதரவான பட்டியல் தயாரிக்கும் பணி நடப்பதாக ராகுல், தேஜஸ்வி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் கமிஷனை கண்டித்து, பீகார் முழுதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. பாட்னாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேஜஸ்வி யாதவ், ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராகுல் பேசியதாவது: கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடந்தது. லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் இண்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், வெகு சில தினங்களுக்குள் நடந்த சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வகையில் பெரும் பின்னடைவை எங்கள் கூட்டணி சந்திக்க நேர்ந்தது. அப்போதே ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை யூகித்தோம். ஆனால், எதுவும் வாய் திறக்கவில்லை. 21ம் நுாற்றாண்டு டேட்டா எனப்படும் தரவுக்களுக்கானது. தரவுகளின் அடிப்படையில் தான் அனைத்தும் சாத்தியமாகிறது. எனவே, லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு இடைப்பட்ட நாட்களில் நடந்த வாக்காளர் திருத்த, சுருக்க பட்டியலை சரி பார்த்தோம். மகாராஷ்டிராவில் மிகக் குறுகிய நாட்களில் கிட்டத்தட்ட 1 கோடி புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனரோ, அங்கெல்லாம், 10 சதவீதம் கூடுதலாக ஓட்டுகள் பதிவானது. அந்த தொகுதிகளில் எல்லாம் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. இது குறித்து பல முறை புகார் எழுப்பியும், தேர்தல் கமிஷன் அதை கண்டு கொள்வதாக இல்லை. ஓட்டுச்சாவடிகளின் வீடியோ பதிவை கேட்டால் அதை தர மறுக்கின்றனர். தற்போது பீகார் தேர்தலிலும் அதைத் தான் செய்ய முயற்சிக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் என்ற பெயரில், ஏழை, எளிய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. ஒரே கட்டடத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது. இது எப்படி சாத்தியம். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் பாஜவின் வாக்கு வங்கிகள். போலி வாக்காளர்களை சேர்த்து, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் போலவே பீகாரிலும் ஓட்டுகளை திருடும் முயற்சியில் என்டிஏ கூட்டணி ஈடுபட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் கமிஷன், எங்கள் தரப்பு புகாருக்கு செவிமடுக்க மறுக்கிறது என ராகுல் குற்றம்சாட்டினார். இந்த போராட்டத்தில், காங்கிரஸ், ஆர்ஜேடி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பற்றிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் பல முறை விளக்கம் அளித்த பிறகும், ராகுல் மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன.

ஜூலை 09, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mahendran Puru
ஆக 10, 2025 06:53

ராகுல் போட்ட அணுகுண்டு, அமித் ஷா கனவில் நரசிம்ம அவதாரமாக வந்த நேருஜி, அமித் ஷா புலம்பல். ஒரு தொகுதியில் நடந்த பித்தலாட்டங்களை புட்டு புட்டு வைத்துள்ளார் ராகுல். இது உதாரணமே.


Ethiraj
ஆக 08, 2025 08:50

Let voters ,political parties check the voters list lodge specific complaint with election commision uf any discrepancy is there


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ