எஸ்.ஜி.சூர்யா உட்பட பாஜவினர் கைது ! ஸ்டேஷன் முற்றுகை | Bjp | S.G. Surya | signature campaign
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜ சார்பில் சமக்கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளனர். ஆன்லைன் வாயிலாக ஆதரவளிக்க puthiyakalvi.in என்ற இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடம் நேரடியாக சென்று கையெழுத்து வாங்கியும் பாஜவினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை கையெழுத்து வாங்க சென்ற போது போலீசார் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வாசலில் கையெழுத்து இயக்கம் நடந்தது. பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்களுக்கு மும்மொழி கல்வி கொள்கை குறித்து பாஜவினர் எடுத்து கூறினர். அரசு பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் குடுத்து பாஜவினர் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியதாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, நிகழ்சி ஏற்பட்டாளர் பாஜ கவுன்சிலர் சுந்தரம், மோகன் குமார், கோட்டீஷ்வரன், அன்பரசன் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து ஸ்டேஷனில் இன்று குவிந்த பாஜவினர் முற்றுகையிட்டனர். நாங்களும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் எங்களையும் கைது செய்யுங்கள் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வைஷ்ணவி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றினார்.