வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்! இக்கட்டான சூழலில் மத்திய அரசு | Border Issue | Bangladesh | Banglade
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சென்ற ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் ஆட்சி கவிழ்ந்தது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த பின், போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டது. நாட்டின் தென்கிழக்கே உள்ள சிட்டகாங் மலைத்தொடர் பகுதிக்குள்ளும் ராணுவம் நுழைந்தது. மலை பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கும், வங்க மொழி பேசும் குடியேறிகளுக்கும் ஏற்கனவே நீண்ட கால மோதல் உள்ளது. 1997ல் நிறுத்தப்பட்ட இந்த பழங்குடியினப் போர் மீண்டும் துவங்கும் சூழ்நிலையை வங்கதேச அரசு உருவாக்குவதாக பழங்குடியினர் கூறுகின்றனர். மலைப் பகுதிகளுக்குள் ராணுவம் நுழைந்து, எல்லையை பாதுகாப்பதாக கூறி முகாமிட்டுள்ளது. பள்ளிகள், ராணுவத்தினர் தங்குமிடமாக மாறியது. எங்கு பார்த்தாலும் ராணுவ முகாம்கள், ராணுவ வீரர்கள் நடமாட்டம். விவசாயம் போன்றவற்றில் ஈடுபட முடியாமல் உள்ளூர்வாசிகள் முடக்கப்பட்டனர். இது தங்களை வெளியேற்றும் முயற்சி என கூறி அரசுக்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் வங்கதேசத்தின் மற்றொரு அண்டை நாடான மியான்மரில் அராகன் ஆர்மி என்ற ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத போராட்டக் குழு, வங்கதேச அரசு தங்களுக்கு எதிராக செயல்படுவதாக மோதல்களில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் நாட்டின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் சூழலில் வங்கதேசத்துக்கு எதிராகவும் அராகன் ஆர்மி குழுவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஏற்கனவே எல்லையை ஒட்டியுள்ள பல பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தப் பகுதிகள் சிட்டகாங் மலை தொடரை ஒட்டி அமைந்துள்ளன. இப்படி 2 நாடுகளின் எல்லைகளிலும் போராட்டங்களால் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதன் எதிரொலியால் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து மிஜோரம் வழியாக, மியான்மரின் சிட்வே துறைமுகத்தை இணைக்கும் கலடான் பல்முனை போக்குவரத்து திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. அந்த பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர்கள் இரு நாடுகளின் போராட்டக்காரர்களாலும், ராணுவத்தாலும் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்டின் எல்லைகளும் ராணுவம் அல்லது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது நடப்பவற்றை, அந்த இரண்டு நாடுகளுக்கான பிரச்னை என மவுனமாகவும் இருக்க முடியாது. குறிப்பாக சிட்டகாங் மலைத்தொடர் நம் நாட்டின் மிஜோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும், பிரிவினைவாத மற்றும் பழங்குடியினர் பதற்றங்களை சந்தித்த வரலாறு கொண்டவை. அரகான் ஆர்மி குழுவினர் இந்த மாநிலங்களை சேர்ந்த பிரிவினைவாத அமைப்புகளையும் சேர்த்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் அபாயம் உள்ளது. இது வன்முறை சம்பவங்கள், ஊடுருவல் என நம் நாட்டுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அராகன் ஆர்மி குழுவினருடன் திரைமறைவு பேச்சு நடந்து வருகிறது. நேரடி பேச்சு நடத்தினால் அது மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைந்து விடும். வங்கதேசத்தின் கோபத்தையும் சந்திக்க நேரிடும். வங்கதேசத்துடன் பேச்சு நடத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இரண்டு பேருக்கு இடையே நடக்கும் சண்டையை வேடிக்கை பார்த்தாலும், விலக்கி விட்டாலும் காயம் ஏற்படும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது. #Bangladesh | #BangladeshConflict | #BangladeshTension | #Myanmar | #CentralGovt | #Chittagong