பாசம் காட்டிய மாணவிகள்: நெகிழ்ந்த பிஎஸ்எப் வீரர்கள் BSF Raksha Bandhan| Jammu School girls
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்க்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராக்கி கயிறு விற்பனை களைகட்டியுள்ளது. பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, அவர்களின் நலன், பாதுகாப்புக்காக பிரார்த்திப்பர். கயிறு கட்டிவிடும் சகோதரிகளுக்கு சகோதரர்கள் அன்பு பரிசளித்து மகிழ்வர். அந்த வகையில் ஜம்முவில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிஎஸ்எப் வீரர்களுடன் பள்ளி சிறுமிகள் ரக்க்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினர். ஜம்முவை சேர்ந்த பள்ளி சிறுமிகள் பலர், அவர்களே தயாரித்த பிரமாண்ட ராக்கியை, அங்குள்ள பிஎஸ்எப் முகாமுக்கு எடுத்துச் சென்றனர். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, எதிரிப்படைகளை துவம்சம் செய்து, நம்மை பாதுகாத்த வீரர்களுக்கு அந்த பிரமாண்ட ராக்கியை சமர்ப்பித்தனர். தொடர்ந்து அங்குள்ள வீரர்கள் அனைவருக்கும் தனித்தனியாக ராக்கி கயிறு கட்டிவிட்டனர். தங்களை சகோதரராக எண்ணி ராக்கி கயிறு கட்டிய சிறுமிகளுக்கு ஜவான்கள் இனிப்பு வழங்கினர். நமக்காக குடும்பத்தை விட்டு எல்லையில் இரவு, பகல், மழை, வெயில் பார்க்காமல், உறக்கம் தொலைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நம் வீரர்களை எங்கள் சகோதரர்களாக எண்ணி, அவர்களுக்கு ராக்கி கட்டியதில் மகிழ்ச்சி என மாணவிகள் கூறினர்.