ரஷ்யா கையில் உலகின் கொடிய ஆயுதம்... ஷாக் வீடியோ burevestnik missile test video | russia vs ukraine
உக்ரைன், ரஷ்யா இடையே 3 ஆண்டுகளை தாண்டியும் தீவிர போர் நடக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. போரை நிறுத்த தயார் என்று சொல்லும் ரஷ்யா, உக்ரைனில் தங்கள் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்று செக் வைக்கிறது. இருப்பினும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து ரஷ்யாவை பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகளின் அழுத்தத்தை முறியடிக்க ரஷ்ய அதிபர் புடின் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். அணு ஆயுத பயிற்சியில் ஈடுபடும்படி ராணுவத்துக்கு உத்தரவு போட்டார். அதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக ரஷ்யா மேம்படுத்தி வந்த உலகின் சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையின் இறுதி சோதனையையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டார். அதன்படி ரஷ்ய ராணுவம் மேம்படுத்தி வந்த சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ரஷ்யா சோதித்த அணு ஆயுதம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. அந்த ஆயுதம் என்ன? அதன் பவர் என்ன என்பதை பார்க்கலாம். ரஷ்யா இப்போது சோதனை செய்திருக்கும் அணு சக்தி கொண்ட ஏவுகணைக்கு 9M730 Burevestnik என்று பெயர். நேட்டோவின் எழுச்சிக்கு பிறகு ரஷ்யா மேம்படுத்தி வரும் முக்கிய அணு சக்தி கொண்ட ஏவுகணை. இதன் இறுதி வடிவத்தை தான் இப்போது ரஷ்யா சோதனை செய்து வெற்றி கண்டு இருக்கிறது. சோதனையின் போது அசுர வேகத்தில் பாய்ந்தது. கிட்டத்தட்ட 14,000 கிலோ மீட்டர் தூரம் பறந்தது. வானில் மட்டும் 15 மணி நேரம் இருந்தது. இவ்வளவு சக்தி வாய்ந்த ஏவுகணையை வைத்து உலகின் எந்த மூலையில் இருக்கும் நாட்டையும் ரஷ்யாவால் தாக்க முடியும்.