கனடா சைபர் பாதுகாப்பு மையம் பரபரப்பு அறிக்கை | Canada Cyber | Canada India Cyber List
கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூனில் கனடாவில் கொல்லப்பட்டார். அப்போது முதல் இந்தியாவுக்கும் நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார். கனடா அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் மத்திய அமைச்சர் அமித் ஷா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளார் என கூறினார். ஆனால் அதற்கான ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை. இது உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அடிப்படை ஆதாரம் இல்லாத அபத்தமான குற்றச்சாட்டு என இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கனடா தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளார். கனடா உயரதிகாரிகளே தவறான தகவல்களை ஊடகங்களில் கசியவிட்டுள்ளனர். எங்கள் தூதரக அதிகாரிகளைக் கனடா அரசு கண்காணித்து வருகிறது. அவர்களின் தொலைப்பேசி பேச்சுகளையும் இடைமறித்து கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற நிலை இருந்தால் தூதரக உறவுகளைச் சீர் செய்வது கடினம். தொழில்நுட்ப காரணங்களை சொல்லி கனடா அரசு மிரட்டல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. எங்களுடைய தூதரக பணியாளர்கள் ஏற்கனவே கனடாவில் தீவிரவாதம் மற்றும் வன்முறை நிறைந்த சூழலில் பணி செய்து வருகிறார்கள் என வெளியுறவு அதிகாரி ரன்தீர் கூறினார். இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்தியாவை சைபர் எதிரி நாடுகள் பட்டியலில் கனடா சேர்த்துள்ளது. கனடாவின் சைபர் பாதுகாப்பு மையம் சமீபத்தில் 2025 - 2026ம் ஆண்டுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் எதிரி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது. கனடாவின் முக்கிய எதிரி நாடுகள் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகியவற்றுடன் இந்தியாவின் பெயர் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.