சொந்த அதிகாரிகளையே குற்றம் சாட்டிய கனடா பிரதமர்! | Canada PM | Justin Trudeau | PM Modi | Nijjar plo
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கொல்லப்பட்டார். கனடா குடியுரிமை பெற்றுள்ள அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சூழலில், கனடாவின் முன்னணி பத்திரிகையான, தி குளோப் அண்ட் மெயில் நிஜ்ஜார் கொலை குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நிஜ்ஜார் கொலை சம்பவம் குறித்த திட்டம் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு தெரியும் என கூறப்பட்டு இருந்தது. இந்த செய்திக்கும் இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகை செய்தி ஊகமானது மற்றும் தவறானது என கனடா தரப்பில் அறிக்கை வெளியானது. ஆதாரமின்றி கனடா பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். உளவுத்துறையில் உள்ள சில கிரிமினல்களின் வேலை அது. அரசின் மிகவும் ரகசியமான விஷயம் என்ற பெயரில், பத்திரிகைகளுக்கு கிரிமினல்கள் தரும் செய்திகள் தவறாக வந்துள்ளது. இதில் ஏதேனும் சதி இருக்கலாம். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா மக்களை பாதுகாப்பது தான் கனடா தலைவராக என் முதன்மை பணி. அதை செய்து வருகிறேன் என ட்ரூடோ பதிலளித்தார்.