ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது விசாரணை: பட்டியலிட சுப்ரீம் கோர்ட் சம்மதம்
#CaseAgainstCEC #ChiefElectionCommissioner #GyaneshKumar #SupremeCourt #SIR #CaseAgainstSIR நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நடத்த, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் நடவடிக்கை எடுத்தார். அதன் படி, பீகாரில் துவங்கிய இந்தப் பணி, தமிழகம், கேரளா, உபி, மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் முடிக்கப்பட்டது. பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியோர், போலி வாக்காளர்கள் என, லட்சக்கணக்கானோர் பெயர்கள் நீக்கப்பட்டன. தற்போது டில்லியில் எஸ்ஐஆர் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் பணியை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்படுத்தியதாகவும், இதற்கு மற்ற இரு தேர்தல் கமிஷனர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே, தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், எஸ்ஐஆர் விவகாரத்தில், மற்ற இரு தேர்தல் கமிஷனர்களின் ஒப்புதல் இன்றியும், அவர்களின் எதிர்ப்புக்கு இடையேயும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். இது, அவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதை காட்டுகிறது. தேர்தல் கமிஷனுக்கு கூட்டு முடிவெடுக்கும் பொறுப்பு தான் உள்ளது. அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டார். அவர் இனியும் அந்த பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது.