உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மர்மம் விலகுமா? ராமஜெயம் வழக்கில் முக்கிய திருப்பம் | CBI | Ramajeyam Case | Madras High Court

மர்மம் விலகுமா? ராமஜெயம் வழக்கில் முக்கிய திருப்பம் | CBI | Ramajeyam Case | Madras High Court

தூசி தட்டப்படும் ராமஜெயம் வழக்கு தோண்டப்படும் பழைய சம்பவங்கள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ல் திருச்சியில் வாக்கிங் சென்றபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்பேரில் ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வழக்கை தமிழக அரசின் காவல் துறை அதிகாரிகளே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் கடந்த 2022ல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் சிபிசிஐடி டிஜிபி கண்காணிப்பில் அப்போது தூத்துக்குடி எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதன்படி விசாரணை குறித்த அறிக்கைகள் அவ்வப்போது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல் துறையின் சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகம்மது ஜின்னா ஆஜரானார். ராமஜெயம் கொலை வழக்கில் பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலைக்கான உள்நோக்கங்களும் ஆராயப்பட்டு புலன் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி புலன் விசாரணை நடைபெற்று வந்தது. இப்போது ஜெயக்குமார் கடலூர் மாவட்ட எஸ்.பியாக பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் புலன் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக திருச்சி அல்லது திருச்சி அருகிலுள்ளவர்களை புலன் விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் விசாரணை நடத்த வசதியாக இருக்கும் என கூறினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள ஜெயக்குமார் எஸ்பிக்கு மாற்றாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்பி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என உத்தரவிட்டார். இந்த அதிகாரிகள் ஏற்கெனவே உள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகளுடன் இணைந்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரையில் கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ